இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா

தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, “அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் யங்ட்சீ என்ற எல்லைப் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சீன துருப்புகள் நுழைந்ததை அடுத்து அங்கு மோதல் நிகழ்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்ற சீன ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது. உரிய நேரத்தில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை காரணமாக சீன துருப்புகள், தங்கள் பகுதிக்குச் சென்றுவிட்டன.

எல்லையை பாதுகாக்கும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த மோதலில் இந்திய தரப்பில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ராணுவ வீரர்கள் சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியின் கமாண்டர் மட்டத்தில் கொடி சந்திப்பு நிகழ்ந்தது. இதில், இரு தரப்பிலும் கமாண்டர்கள் பங்கேற்று, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தனர். எல்லையில் அமைதி நிலவ சீன தரப்பும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தூதரக அளவில் கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தார்.

Related posts