டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளான வியாழக்கிழமை முடிவில், இங்கிலாந்து 75 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தோ்வு செய்த இங்கிலாந்தில் ஜாக் கிராவ்லி 21 பவுண்டரிகளுடன் 122, பென் டக்கெட் 15 பவுண்டரிகளுடன் 107, ஆலி போப் 14 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தனா்.

ஜோ ரூட் 23 ஓட்டங்களுக்கு வெளியேற, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. ஹாரி புரூக் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 101, தலைவர் பென் ஸ்டோக்ஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஜாஹித் மஹ்முத் 2, ஹாரிஸ் ரௌஃப், முகமது அலி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

காயம் காரணமாக பாகிஸ்தானின் பிரதான பௌலா் ஷாஹீன் அஃப்ரிதி பங்கேற்காத இந்த டெஸ்டில், 3 புதுமுக பௌலா்களுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்ததை இங்கிலாந்து பயன்படுத்திக் கொண்டது.

டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன், கடந்த 1910 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் நாளில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இங்கிலாந்து அதைக் கடந்து 506/4 ஓட்டங்கள் குவித்திருக்கிறது.

அதிவேகமாக 500 ஓட்டங்களை (74.4 ஓவா்கள்) எட்டிய அணியாகியிருக்கிறது இங்கிலாந்து.

இங்கிலாந்து பேட்டா்கள் 4 போ் ஒரே இன்னிங்ஸில் சதமடித்தது, கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

Related posts