கனேடிய தமிழ் காங்கிரஸ் மீதான தடை நீக்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

கனேடிய புலம்பெயர் அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்கியமைக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கனேடிய தமிழ் காங்கிரஸால் வெளியிடப்பட்ட கடிதத்தை அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிடம் பஞ்சலிங்கம் கந்தையா நேற்று (16) கையளித்தார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவற்கான இலங்கையின் சரியான வழிகாட்டுதல்களை பாராட்டியுள்ள கனேடிய தமிழ்காங்கிரஸ், சகவாழ்வை ஏற்படுத்த விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோருடன் நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு, இலங்கையில் தாம் விரும்பும் பிரதேசத்தில் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பளிக்கும் அதே வேளை, அனைத்து இலங்கையரும் சமமாக பாகுபாடின்றி நடத்தப்படுவரென்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

கனேடிய தமிழ் காங்கிரஸால் அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாண அரச வைத்தியசாலைகளின் மருத்துவ தேவைகளுக்காக நிதி வழங்கியதற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

—–

ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக்களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய,கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பல திட்டங்கள் கொண்ட இந்த ஆவணத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேயதாச ராஜபக்ஷவிடம் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதி இந்த ஆவணத்தை கையளித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு என்றில்லாமல் தெற்கில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புதல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, மற்றும் தொழிற்சாலைகள், தலைமன்னார் முதல் இந்தியா வரையான கடல் வழிப்பாதை, வடக்கு, கிழக்கு மக்களது வாழ்வதாரம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவதை்தல், காணாமல் போனோர் பற்றிய நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடங்கியதாக இத்திட்டத்தை நேற்று பஞ்சலிங்கம் கந்தையா கையளித்தார்.

இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து கனடாவில் வாழும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கந்தையா நேற்று (16) புதன்கிழமை நீதி அமைச்சா் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷவை நீதி அமைச்சில் சந்தித்தார்.

இதன்போதே,வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள், செயற்பாடுகள், பற்றிய ‘கந்தையா பிளான்’ என்ற பெயரிலான இந்த ஆவணத்தை அமைச்சரிடம் கையளித்தார்.

பஞ்சலிங்கம் கந்தையா அங்கு ஊடகவியலாளா் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தடைப்பட்டியலிலிருந்து கனேடியத் தமிழ் காங்கிரஸ் கட்சியை நீக்கியமைக்கும், சில அரசியல் கைதிகளை விடுதலை செய்தமைக்கும் நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

1983இல், நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் அநேகமான தமிழ் மக்கள் உலக நாடுகள் முழுவதிலும் இடம் பெயா்ந்து வாழத் தொடங்கினர். அதில் நானும் யாழ்.காரைநகரிலிருந்து இடம்பெயா்ந்து கனடாவில் டொரோன்டோவில் வாழ்கிறேன். தற்பொழுது நாங்கள் எமது தாய் நாட்டை வந்தடைந்துள்ளோம். சில செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு செய்யும் படியும் அரசை வழியுறுத்தி வரவேதாகவும் கந்தையா தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சா் விஜேயதாச ராஜபக்ஷ.

வடக்கில் 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மிகுதியாக 05 வீதம் மட்டுமே உள்ளது. அதனை நீதி அமைச்சின் செயலாளா் தலைமையில் பாதுகாப்புப் படையினருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஆராய்ந்து வருகின்றோம்.

அத்துடன் முன்னாள் விடுதலைப் புலிகள் ஏற்கவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட அரசியல் கைதிகள் 31 பேர் சிறையிலிருந்தனர். அவா்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துள்ளோம். மிகுதியானவா்களின் விடுதலைக்காக சில வழக்கு விசாரனைகள் உள்ளன. அவைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் 2,000 விண்ணப்பங்கள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்கு கடந்த 04 மாதங்களில் கிடைத்துள்ளன. அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அவை பற்றி செயலாளர் மட்டத்தில் பரிசீலனை செய்து உரிய நிவாரணங்கள். வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன் இந்தியாவிலிருந்து வந்த 11,800 பேரது பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

புலம்பெயர் இலங்கை தமிழ் டயஸ்போர உறுப்பினர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் ஜனாதிபதி மட்டத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றோம். வடக்கில் வாழ்வாதாரங்களுக்கு உதவும் படியும் கோரிக்கை விடுப்பதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

Related posts