‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்யக் கோரும் காங்கிரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தவறான தகவல்களை பரப்புவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனை கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான விடி சதீசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. சுமார் 1.19 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். அதில் எப்படி கேரளாவில் பெண்கள் பிற மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து பேசுகிறார். அதோடு சுமார் 32,000 பெண்கள் சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் புதையுண்டு இருப்பதாகவும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்படுவது குறித்தும் பேசுகிறார்.

இதுதான் இப்போது சர்ச்சையை எழுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த பலரும் இதற்கு தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இப்போது இந்த படத்திற்கு தடை கோரி காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“நான் அந்த டீசரை பார்த்திருந்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனை தடை செய்ய வேண்டும். திரைப்படங்களுக்கு தடை விதிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்.

ஆனால், இது சமூகங்களுக்கு இடையே சிக்கலை உருவாக்கும். அதனால், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும்” என கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீசன் தெரிவித்துள்ளார்.

இந்த டீசரில் சொல்லப்பட்டுள்ளது போல எந்தவொரு வழக்கோ அல்லது பதிவோ மாநில போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய புலனாய்வு பிரிவினர் வசம் இது குறித்த தகவல் இருந்தால் அதை பொது பார்வைக்கு கொண்டு வரலாம். ஐஎஸ் அமைப்புக்கு கேரளாவில் ஆள் சேர்க்கை நடைபெறுவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீடியோ லிங்க்..

Related posts