சோபித தேரரின் பார்வையில் சமூக பொறுப்பு

மறைந்த அதிவணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித நாயக்க தேரரின் ஏழாவது வருட நினைவுகூரலை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

இந்நாட்டில் தோன்றிய உன்னத பௌத்த துறவிகளுள் ஒருவரான அதிவணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரர் எம்மை விட்டு மறைந்து இன்றுடன் ஏழு ஆண்டுகளாகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது அல்லலுறும் மக்களால் சோபித தேரரின் மறைவு முன்னொருபோதும் இல்லாத வகையில் தற்போது வெகுவாக உணரப்படுகின்றது. தமது குறுகிய எதிர்பார்ப்புகளிலிருந்து விலகி நாட்டின் எதிர்கால நலனை மாத்திரம் சிரமேற்கொண்டு செயற்படும் தேசிய தலைமைத்துவத்திற்கான வெற்றிடமொன்று காணப்படும் வரையில் சோபித தேரரின் இழப்பானது தொடர்ந்தும் எம்மால் உணரக்கூடியதாகவே இருக்கும்.

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடிக்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், சோபித தேரர் எமக்கு சுட்டிக்காட்டிய சமூக மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் ஆழம் குறித்தும் அதேபோன்று சோபித தேரரின் நோக்கங்கள் தொடர்பிலும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்நாட்டின் எதிர்கால நலன் மக்களுக்கும் அரச நிர்வாகத்திலும் பொறுப்புக்கூறும் கட்டுப்பாடுடைய, விழுமியப் பண்புகளைக் கொண்ட அரசியல்கலாசாரத்தை உறுதிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது என்பதை இந்நாட்டு மக்களுக்கு அவர் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

‘நாட்டில் பௌத்த துறவிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பாரிய கடமை ஒன்று உள்ளது. அது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகும். இந்த அரசியலமைப்பினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது. இதுவே அழிவின் ஆரம்பமாகும். இதிலுள்ள தேர்தல் முறை, பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு போன்ற அனைத்துமே தவறாகும். அது பெரும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் சோபித தேரர் குறிப்பிட்டிருந்த போதிலும் அன்னாரது எழுபதாவது ஜனன தினத்தன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் அதனை மேலும் வலியுறுத்திக்கூறினார்.

மாதுளுவாவே சோபித தேரர் கட்சி அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. அவர் கட்சி அரசியலில் ஈடுபடாதது மாத்திரமன்றி தேரர்களின் அதிகார அரசியல் பிரவேசத்தையும் ஆதரிக்கவில்லை. ‘வாதிபசிங்ஹயானோ’ என்ற நூலில் அவர் அதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கும் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான அழைப்புகள் கிடைத்தன. ஆயினும் அவை அனைத்தையும் நிராகரித்து விட்டேன். ஏனெனில் தேரர்கள் கட்சி அரசியலில் ஈடுபட கூடாது என்பதே எனது நம்பிக்கையாகும். எமக்கு அதனை விட பரந்த அரசியல் உள்ளது. அது வல்பொல ராஹுல தேரர் தமது பிக்ஷவக்கே உருமய (துறவியின் மரபுகள்) எனும் நூலில் குறிப்பிட்ட, யக்கடுவே தேரர் வித்தியாலங்கார பிரகடனத்தில் சுட்டிக்காட்டிய அரசியலாகும். பாரபட்சமற்ற பரோபகார நடத்தையே எமது அரசியலாகும்.

பரோபகார நடத்தை என்ற ஏகோபித்த இலக்கினை நோக்கிய அன்னாரது சமூக தலையீடு பல துறைகளில் பரந்துபட்டு காணப்பட்டது.

அதன் ஆரம்ப காலத்தை தேரரின் பல்கலைக்கழக பருவத்தில் இனங்காணக்கூடியதாக உள்ளது. அப்போதைய வித்தியோதய பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக 1965 இல் அவர் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகக் கல்வியின் பின்னர் பௌத்த பேராசிரியராகவும் பின்னர் பௌத்த பீடாதிபதியாகவும் செயற்பட்ட காலம் முதலே அவர் இந்நாட்டு தேசிய பிரச்சினைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

நாட்டின் இளம் தலைமுறையினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்கும் நோக்கில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் அமைப்பு நாற்பது ஆண்டுகளைக் கடந்து இன்றும் செயற்பாட்டுடன் உள்ளது. எமது நாடு தீவிரவாதத்தின் பிடியிலிருந்த போது நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தேசிய வீரர் மன்றம், தாய்

நாட்டை பாதுகாப்பதற்கான அமைப்பு ஆகியவற்றின் ஊடாக அன்னார் ஆற்றிய பணிகளை எவராலும் மறந்துவிட முடியாது. இதன்போது அவர் நாட்டை பிரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கும் அதனை சார்ந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக மாத்திரமே துணிந்து செயற்பட்டார். பல தசாப்தங்களாக நமது நாடு முகங்கொடுத்த யுத்த நிலைமையானது, நாட்டின் அரசியல் அதிகாரத்தை பெற்றவர்களால் தீர்க்கப்படாத பிரச்சினையாக, கொடிய புற்றுநோய் போன்று மாறக்கூடிய துர்ப்பாக்கிய நிலை என்பதை உணர்ந்த அவர் இனவாதத்தின் அடிப்படையில் ஒருபோதும் தீர்வு காண முயலவில்லை.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தேசிய பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டின் முதன்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் வலியுறுத்தினார்.

இவ்விடயத்தில் தம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை தெளிவாக புரிந்துகொண்டு நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்காக தம்மால் இயன்ற அனைத்தையும் நிறைவேற்ற பின்னிற்கவில்லை. சகல இன, மத மக்களுடன் இணைந்துசெயற்படாத நாட்டிற்கு சிறந்தவொரு எதிர்காலம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, அதற்காக விரிவான கலந்துரையாடலை தோற்றுவித்த சமய தலைவர் என இதனாலேயே அவர் போற்றப்படுகின்றார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினை ஆரம்பித்து வைத்ததன் ஊடாக மனிதாபிமானம் பாதுகாக்கப்படுகின்ற விழுமியப் பண்புடைய நாடு என்ற வகையில் இலங்கை தேசத்தை மீளக் கட்டியெழுப்பவே அவர் எதிர்பார்த்தார். பொதுமக்களுக்கான நீதியை நிலைநாட்டத்தக்க சூழலை உருவாக்குவது அதன் முதன்மை நோக்கமாகும். சமூக அரசியல் மறுசீரமைப்பு செயற்பாட்டினை இலக்காகக் கொண்டு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கை அதிவணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் இலக்கின் எதிரொலியாக அமைந்தது.

ஜனநாயக ஆட்சி முறைமை, சட்டத்தின் ஆதிக்கம் இன மற்றும் மத நல்லிணக்கம் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை இலக்குகள் அதில் உள்ளடங்குகின்றன. இந்த பத்து அம்ச கோரிக்கைகளில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக ஆழமான கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

எதிர்காலத்தில் ஏதேனும் ஒருநாள் எவரேனும் ஒருவரால் இந்நாடு சிறந்த முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லப்படுமா? அவ்வாறாயின் அது சோபித தேரரின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்த மேற்குறித்த பத்து அம்ச கோரிக்கை இந்நாட்டில் யதார்த்தமாகும் தினத்திலேயே நடைபெறும்.

கரு ஜயசூரிய
தலைவர், சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

Related posts