இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) நடைபெறவுள்ளது.

அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெறுவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு அதன் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இதன்படி, கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது, இது தொடர்பாக முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய கலந்து​ரையாடல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

——

பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர்.

எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண் விலையை கட்டுப்படுத்தி 200 ரூபாவிற்குள் விற்க சம்மதித்தோம்.

எனவே தற்போதைய 10 ரூபா விலை குறைப்பை செய்ய முடியவில்லை.

கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் ஆகியன, மாவின் விலையை குறைதால் நாமும் பாண் விலையை குறைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

—–

கெபிதிகொல்லேவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் அண்மையில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்டின் பிரேத பரிசோதனை நேற்று (02) நடத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தலையில் தாக்கப்பட்டதில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதங்களால் மரணம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சார்ஜன்ட் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 13 பேரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் இந்தக் குற்றத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என தெரியவந்ததையடுத்து, அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மற்றுமொரு சந்தேக நபரை தடுத்து வைத்து 48 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts