அரசாங்கம் 2023 ஆம் ஆண்டுக்கான செலவினமாக 3,65,726 கோடியே 56,38,000 ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. வழமையை விட இம்முறை சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான செலவினமான 3,65,726 கோடியே 56,38,000 ரூபாவில் அதி கூடிய ஒதுக்கீடாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 85,625 கோடியே 40,00,000 ரூபாவும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 61,393 கோடியே 70,40,000 ரூபாவும் பாதுகாப்புக்கு
53,920 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்பு சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்தவினால் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான அரசின் செலவினங்களில் விசேட செலவினமாக 2,509 கோடியே 75,40,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஜனாதிபதிக்கான செலவினமாக 378 கோடியே 21,50,000 ரூபாவும் பிரதமருக்கான செலவினமாக 101 கோடியே 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 794 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 209 கோடியே 05 இலட்சம் ரூபாவும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 164 கோடியே 40 இலட்சம் ரூபாவுமென மொத்தம் 373 கோடியே 45 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 18கோடியே 40 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 21கோடியே 30 இலட்சம் ரூபாவும் இந்து சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 29 கோடியே 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 61,393 கோடியே 70,40 000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 41,000 கோடி ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 12,920 கோடி ரூபாவுமென மொத்தமாக பாதுகாப்புக்கு 53,920 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சுக்கு 2,814 கோடி ரூபாவும் நீதி,சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு அமைச்சுக்கு 3,320 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 32,199 கோடியே 99 98,000 ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு 1,900 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.