நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவு

நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 40 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) காலை உயிரிழந்தார்.
அவருக்கு வயது 58. ராஜூவின் மறைவை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜூவின் சகோதரர் திபூ ஸ்ரீவஸ்தவா செய்தி நிறுவனம் ஒன்றிடம்,”எனக்கு சிறிது நேரத்திற்கு முன்புதான், ராஜூவின் மரணம் குறித்து குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தது.
உண்மையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி. கடந்த 40 நாட்களாக அவர் மருத்துவமனையில் நோயை எதிர்த்து கடுமையாக போராடி வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகரான ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடந்த ஆக.10-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டார்.
முன்னதாக, ராஜூவின் மூத்த மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்பாவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் அவரது உடல் நிலை மெல்ல முன்னேறி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜூ இன்று (செப்.21) காலை 10.20 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
ராஜூ ஸ்ரீவத்ஸவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. சிறந்த நடிகர் என்பதைத் தாண்டி அவர் மிகவும் கலகலப்பான மனிதராகவும் இருந்தார்.
சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அவரது ரசிகர்களுக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாந்தி” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1963-ம் ஆண்டு பிறந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா, சிறுவயதிலிருந்தே நகைச்சுவை நடிகராக வேண்டும் என்று விரும்பம் கொண்டிருந்தார்.
1980-ம் ஆண்டு முதல் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ராஜூ, 2005-ம் ஆண்டு நடந்த, “தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்” நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலமாக மிகப்பெரிய ஸ்டான்ட்-அப் காமெடியனாக வளர்ந்தார்.
“மைனே பியார் கியா”, “பாசிகர்”, “பாம்பே டூ கோவா”, “ஆம்தானி அட்டானி கர்ச்சா ரூபையா” உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராஜூ ஸ்ரீவஸ்தவா உத்தரப் பிரதேச மாநிலத்தின் திரைப்பட வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

Related posts