ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவர், தனது உதவியாளர் விக்னேஸ்வரன் மூலம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் தத் என்கிற பூவி (வயது 36) என்பவர் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், மேலும் ரூ.6 கோடி தரும்படியும், பணம் தரவில்லையெனில் நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் கைது இதற்கு பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான புதுடெல்லியை சேர்ந்த ஜூல்பிகர், அனில்குமார், கரன்கனோஜலா, மித்லேஸ்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த வில்பேஹரா ரன்ஜித்தா, புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரைன்சித்தார்த்தா இங்லே, சென்னை மேற்கு கே.கே. நகரை சேர்ந்த ஹேபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த இந்திரஜித்சிங், நீலம்கரூர், கங்கதீப்கர், ஹர்பித்சிங் ஆகிய 11 பேரும் உடந்தையாக இருந்ததாகவும், எனவே அவர்கள் 12 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் பவ்நிந்தர்சிங் தத் உள்ளிட்ட 12 பேர் மீதும் 16 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைப்பட தயாரிப்பாளரான பவ்நிந்தர்சிங் தத்தை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 பேரை கைது செய்ய தீவிரம் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான ஜூல்பிகர், அனில்குமார் உள்ளிட்ட 11 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 11 பேரும் ராஜஸ்தான், புதுடெல்லி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Related posts