மாடு குத்திக் கிழித்தாலும் : ‘விருமன்’

பணம், பதவிதான் முக்கியம் என கருதும் தந்தைக்கு, அன்பும் பாசமும் வாழ்க்கையின் அடிநாதம் என புரியவைக்கும் ஒரு மகனின் முயற்சிதான் ‘விருமன்’.
குடும்பத்தைத் தாண்டி பணமும், கவுரவமும்தான் முக்கியம் எனக் கருதும் தனது தந்தை (பிரகாஷ்ராஜ்) உடனான பிரிவில் மாமாவிடம் வளர்கிறான் விருமன் (கார்த்தி). அப்பாவிடம் விருமனுக்கு தீரா கோபம் இருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, தனது அண்ணன்களுக்கும், அப்பாவுக்கும் உறவுகளின் உன்னதத்தை உணர்த்த வேண்டும் என பல முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அந்த முயற்சிகள் பலித்ததா, அப்பா – மகனுக்குள் என்ன பிரச்சினை, இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
‘என்ன மாமா சௌக்கியமா?’ என்றபடி அதே சண்டியர் டெம்ப்ளேட்டில் கார்த்தி. தொடை தெரியும்படி லுங்கியைக்கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை, ஷேவ் செய்யாத தாடியுடன், ஹாம்ஸை காட்டுவதற்காகவே அளவெடுத்து செய்த சட்டையை மாட்டிக்கொண்டு விருமனாக சீறுகிறார். கிராமத்துக்கு கதைகளுக்கான அவரின் பொருத்தம் கச்சிதம். ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் கார்த்தி.
அறிமுக நாயகியான அதிதி நடனத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றாலும், உருக்கமான, உணர்ச்சிபூர்வமான, கோபப்படும் காட்சிகளில் நடிப்பில் பாஸாக அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. பணம், பதவி, கவுரவத்தை சுமந்துகொண்டு முரண்டுபிடிக்கும் அப்பா கேரக்டரில் அதகளம் செய்கிறார் பிரகாஷ்ராஜ். கார்த்திக்கு இணையான திரைப் பகிர்வு கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் நியாயம் சேர்க்கிறார்.சூரி, சிங்கம் புலியின் ஒன்லைன் காமெடிகள் நன்றாகவே வேலை செய்கின்றன. தவிர ராஜ்கிரண், கருணாஸ், ஆர்.கே.சுரேஷ் மூவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் முத்திரைப் பதிக்கிறார் சரண்யா பொன்வண்ணன். வடிவுக்கரசி, மனோஜ் பாரதிராஜா தேவையான நடிப்பை பதிவு கொடுத்துள்ளனர்.படம் தொடங்கும்போதே தேவையற்ற காட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குநர் முத்தையா. ஆனால், அந்தக் கதையை அடுத்தடுத்து நகர்த்திக்கொண்டு செல்வதில் சிரமப்பப்பட்டிருக்கிறார். கதையின் மையமே உறவுச் சிக்கல்களும், அதையொட்டிய சென்டிமென்ட்டும் என்றபோது அதற்கான வெயிட்டை பார்வையாளர்களுக்கு கடத்த தவறிவிடுகிறது படம்.
அதில், ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஓரளவுக்கு நியாயம் சேர்க்கின்றன. அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், கதையின் மையப்புள்ளியான உறவுகளின் முக்கியத்துவத்தை பதிவு செய்ய படம் மெனக்கெடவேயில்லை. வெறுமனே அண்ணன்களை திருத்த கார்த்தி மேற்கொள்ளும் முயற்சிகள் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தேமேவென கடக்கின்றன. போலவே, எந்தப் பிரச்சினை நடந்தாலும் சுவருக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் கார்த்தி உடனே… ‘என்னாது..’ என குரல் கொடுத்தபடியே என்ட்ரியும் கொடுக்கும் காட்சிகள் செயற்கையாக துருத்திக்கொண்டு தெரிகிறது.
சரண்யா பொன்வண்ணன் வரும் காட்சிகளும், கார்த்திக்கான கோபத்தின் நியாயமும் திரைக்கதை கைகொடுத்திருக்கின்றன. படத்தின் வசனங்களுடன் வரும் நிறைய பழமொழிகளும், சொலவடைகளும் வார்த்தைக்கான பொருளை கூட்டுகின்றன. படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டடித்த பாடல்கள், படமாக்கப்பட்ட விதத்திலும் ரசிக்கவைக்கின்றன. யுவனின் பிஜிஎம், பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கான ரசனையை மெருகேற்றி கிராமத்தை கூடுதல் அழகாக்கியிருக்கிறது.
ஒரு காட்சியில் ஆர்.கே.சுரேஷிடம் ‘இந்தா சேலையை கட்டிக்க’ என பிரகாஷ்ராஜ் கொடுப்பார். அதற்கு அவர், ‘நான் என்ன பொம்பளையா?’ என கேட்க, ‘பின்ன நீ என்ன ஆம்பளையா.. போய் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வந்திருக்க’ என்று பதில்மொழி உதிர்ப்பார் பிரகாஷ்ராஜ். பெண்களை உயர்வாக மதிப்பதாக சொல்லும் இயக்குநர், இப்படியான ஒரு காட்சியில் சொல்லவரும் அந்த உயர்வு என்ன?. ‘சேல கொண்டு வந்து கொடுத்து என்னைய அசிங்கப்படுத்திட்டான்?’ என்பதும், தொடர்ந்து பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகளும் அபத்தம்.
க்ளைமேக்ஸ் காட்சிகளில் க்ளாஸ் எடுப்பது அயற்சி. சென்டிமென்ட் வசனங்களை காட்சிகளாக கடத்தியிருந்தால் இன்னுமே படத்திற்கு பலம் சேர்த்திருக்கும். அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், மாமா சென்டிமென்ட் என இத்தனையும் இருந்தபோதிலும் பார்வையாளர்களுக்கு அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் இன்னும் அழுத்தமான காட்சிகளை சுவாரஸ்யத்துடன் பதியவைத்திருந்தால் விருமன் நிச்சயம் பார்வையாளர்கள் மனதில் பதிந்திருப்பான்.
படம் பார்த்து முடிக்கும்போது, நமக்கு ‘விருமன்’ படத்தின் பாடல் வரி ஒன்று மனதில் தொக்கி நிற்கிறது. அந்த வரி: “மாடு குத்திக் கிழிச்சாலும் பொழைச்சுக்குவேண்டி…”

Related posts