ரஷிய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

ரஷியாவின் அதிபர் புதினை சந்தித்து பேச போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அந்நாட்டில் போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் நீண்ட நாட்களாக கோரி வருகிறார். இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுவதற்கு போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இத்தாலியைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ரஷியாவில் உள்ள பழம்பெருமை வாய்ந்த தேவாலயத்திற்கும் ரோம் நகரத்திற்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தொடர்பு உள்ளது என்றும் இதன் காரணமாக போப் ஆண்டவர்கள் ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாக நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் போப் அந்த பேட்டியில், “ரஷியாவில் உள்ள தேவாலயத்தின் தலைமை பாதிரியார் பாட்ரியார்க் கிரில் உடன் 40 நிமிடங்கள் வீடியோ மூலமாக பேசினேன். அப்போது அவர் ரஷியாவின் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் விதமாக என்னிடம் விளக்கமளித்தார்.

அதை பொறுமையாக கேட்டுவிட்டு நான் அவரிடம், ‘எனக்கு இது எதுவும் புரியாது. நாம் அரசாங்கங்களின் சேவகர்கள் அல்ல, அரசின் குரலாக நாம் இருக்கக் கூடாது, மாறாக இயேசு கிறிஸ்துவின் சேவகர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன்.

நாம் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு அமைதியின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச தயாராக இருக்கிறேன். இந்த சந்திப்பை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அதற்கான பதில் இதுவரை வரவில்லை. ஒருவேளை இந்த சந்திப்பில் புதினுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் கூட நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts