சுதந்திரம்: ஓர் இஸ்லாமிய பார்வை

சுதந்திரம் என்பது ஒருவர் இன்னொருவரின் குறுக்கீடுகளின்றி தான் நினைத்த பிரகாரம் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதாகும். இது அடிமைத்துவத்துக்கு எதிரானது, ஒரு மனிதன் சட்டம், நீதி போன்றவற்றுக்கு முரண்படாத வகையிலும் அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத அமைப்பிலும் தான் நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமை சுதந்திரம் எனப்படுகிறது.

ஆனால் இன்று இதன் விளக்கம் காலத்தின் சகட ஓட்டத்துக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது. தனிமனிதனுடன் மாத்திரம் சுருங்காது அரசியல், பொருளாதாரம், சட்டம், சமூகம்… என்றபடி வளர்ச்சியடைந்துள்ளது.

அனைத்துக்கும் எதிர்ச்சொற்கள் காணப்படுகின்றன. ‘சுதந்திரம்’ என்ற சொல்லின் எதிர்ப்பதமாக சர்வாதிகாரம், கொடுங்கோன்மை, அடக்குமுறை, அடிமைப்படுத்தல், ஆக்கிரமிப்பு, சுரண்டல், மனித நலன்களுக்கு குந்தகம் ஏற்படும் விதமான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தல், பொறுப்பற்ற தன்மைகள், செயலற்ற நிலைகள், ஒழுங்கற்ற முறைமைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இஸ்லாம் அரபுலகில் தோன்றியபோது அங்கிருந்தவர்கள் சுதந்திரத்தின் வாடையை நன்றாக நுகர்ந்து கொண்டார்கள். அடிமை முறைக்கு எதிரான கருத்துக்கள், மனித கண்ணியம் பேணப்பட்டமை, பிறக்கும் போதே பாவத்தை சுமந்து கொண்டு பிறப்பதில்லை என்ற சிந்தனை, அடிமட்ட மக்களை பொருளாதார சுமையிலிருந்து விடுவித்து கைதூக்கி விடுவதற்கான போதனைகள், பெண் பிள்ளைகளின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட்டமை, அரபி, அஜமி வேறுபாடுகளைக் களைதல், நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இணைந்து செயலாற்றுவதற்கான மத, இன வேறுபாடுகளற்ற முன்னெடுப்புகள், சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற சமத்துவ சிந்தனை மக்களை ஆண்டமை, மனிதனின் சொத்துக்கள், உயிர், அறிவு, செல்வம் பாதுகாக்கப்பட்டமை போன்ற பல விடயங்களை அவர்கள் அனுபவித்தார்கள். முஸ்லிம்கள் மாத்திரமன்றி அவர்களுடன் வாழ்ந்த யூதர்களும் இதனை நன்றாக அனுபவித்தார்கள். அல் குர்ஆனை நாம் நோக்கினால் சுதந்திரம் என்பது ஒரு அடிப்படையான மனித தேவை என்ற கருத்தை பதிந்துள்ளமையை புரிந்து கொள்ளலாம். முதல் மனிதனான ஆதம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளான். ‘ஆதமே… நீங்களும் உங்கள் மனைவியும் சுவனத்தில் விரும்பியதை சாப்பிட்டு அனுபவியுங்கள் (அஃராப் 19) விரும்பியதை சாப்பிட்டு அனுபவித்தல் என்பது எவ்வளவு பெரியதொரு சுதந்திரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வண்டும்.

அத்தோடு ‘இறை பிரதிநிதி’ (பகரா 30), எனது ரூஹை ஊதப்போகிறேன் (ஹிஜ்ர் 28, 29),மனிதனுக்கு சிரம் தாழ்த்துமாறு மலக்குகள் கட்டளையிடப்பட்டமை (அஃராப் 11) ஆதமுக்கு அனைத்து பொருட்களின் பெயர்களும் கற்பிக்கப்பட்டுள்ளமை (பகரா 31) போன்றவைகள் மனிதக் கண்ணியத்தை எடுத்துக்காட்டுகின்றது. மனித கண்ணியம் அவனது சுதந்திரம் என்பன அடிப்படையான ஒரு தேவை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

‘சுதந்திரமாக பிறந்த மக்களை எப்போது அடிமைப்படுத்தினீர்கள்’ என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றும் ‘அல்லாஹ் உங்களை சுதந்திரவானாக படைத்திருக்கும் நிலையில் நீங்கள் மற்றவர்களின் அடிமையாக இருக்க வேண்டாம்’ என்ற அலி (ரழி)யின் கருத்தும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான் தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான் அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. மனிதன் ஒன்றுக்கு அடிமைப்படுகின்றபோது அவனது கண்ணியத்தை இழக்கிறான். மனிதர்கள் சிந்தனா ரீதியாக, அரசியல், சமூக, பொருளாதார, மத ரீதியாக அடிமைப்பட்டிருந்த போது இஸ்லாம் தோன்றியது. அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவித்தது.

இஸ்லாத்தில் நிர்ப்பந்தமில்லை. மாற்றமாக மனிதனுக்கு தெரிவு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ‘உங்களது இரட்சகன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரும் ஈமான் கொண்டிருப்பார்கள். மனிதர்கள் அனைவரும் ஈமான் கொள்ள வேண்டும் என்று அனைவரையும் நிர்ப்பந்திக்க முடியுமா? (யூனுஸ் 99) இது மக்கா காலத்தில் அருளப்பட்ட வசனமாகும்.

மதீனா காலத்தில் அருளப்பட்ட வசனம், ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது (பகரா 256) என்கிறது.

இவ்வசனம் அருளப்பட்டதற்கான காரணத்தை பாரக்கின்ற போது இஸ்லாம் சுதந்திரம் என்ற கருத்தியலுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் என்று இரு அரபு கோத்திரங்கள் காணப்பட்டண. அவர்களது பெண்களுக்கு பிள்ளைகள் கிடைக்கப்பெறாமல் இருந்து, பிள்ளை கிடைத்தால் அவர்களை யூதர்களாக மாற்றுவதாக நேர்ச்சை வைத்தார்கள். இப்படியாக அவர்களது பிள்ளைகள் யூதர்களாகவே வளர்க்கப்பட்டார்கள். இஸ்லாம் மதீனாவில் அறிமுகமாகிய பின்னர் தமது பிள்ளைகளை நிர்ப்பந்தமாக முஸ்லிம்களாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்தனர். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் இச்செயலை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சுதந்திரம் என்பது மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான, அல்லாஹ் விதியாக்கிய ஒரு விடயமாக உள்ளது. இது நினைத்தால் விட்டுவிட முடியுமான ஒரு உரிமையல்ல. மாறாக கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகும்.

அடிமையாக இருப்பதனை இஸ்லாம் மரணிப்பதற்கு சமனாகவும் சுதந்திரத்தை வாழ்வாகவும் கருதுகிறது. அடிமை விடுதலை என்பது மிக உயர்ந்த ஒரு விடயமாகும். ஒரு அடிமை விடுவிக்கப்படுவதன் மூலமாக அவன் வாழ வைக்கப்படுகிறான். இதனால்தான் மோசமான கொலைக்காரன் பரிகாரமாக அடிமை விடுதலையை அல்லாஹ் விதித்திருக்கிறான். (நிஸா 92)

இஸ்லாத்தில் சுதந்திரம் என்பது சமூக வளர்ச்சிக் கட்டத்தின் ஒரு விளைவாகும். மாறாக ஒரு பெரிய புரட்சியின் காரணமாகவோ மக்களின் முதிர்ச்சியின் அடிப்படையிலோ வழங்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக இது பூமியில் வாழ்கின்றவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக வானத்தின் புறத்திலிருந்து வந்த ஒரு கொள்கையாகும்.

வரையறையற்ற சுதந்திரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பகுத்தறிவும் அனுமதிக்காது. எந்த நாடும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதுமில்லை. அப்படி அனுமதிப்பது சாத்தியமான ஒன்றுமல்ல.

இஸ்லாம், சுதந்திரம் தொடர்பில் சில நிபந்தனைகளை விதிக்கின்றது. அடுத்தவர்களின் சுதந்திரம் ஆரம்பிக்கும் இடத்தில் உனது சுதந்திரம் முடிவடைகின்றது என்பார்கள். சுதந்திரம் என்று கூறிவிட்டு அடுத்தவனை மிதிக்க முடியாது.

யூ.கே. றமீஸ்
MA – சமூகவியல்

Related posts