முதல் பார்வை: காடன்

காட்டையும் அதில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கான யானைகளையும் மனிதர்களின் லாப வேட்டையிலிருந்து காப்பாற்றப் போராடும் படித்த பழங்குடி மனிதனின் கமர்ஷியல் யுத்தம்தான் ‘காடன்’.
‘சரஸ்வதி சபதம்’ படத்தில் இரந்து பிச்சை எடுக்கும் பெண்ணின் கழுத்தில் மாலையைப் போடும் பட்டத்து யானை அவளை ராணியாகத் தேர்ந்தெடுக்கும். 70களின் தமிழ் சினிமாவில் யானை இப்படித்தான் அறிமுகமானது. அதன்பின் சாண்டோ சின்னப்பா தேவர், இராம.நாராயணன் ஆகியோர் எடுத்த பல படங்களில் யானைக்கும் மனிதனுக்குமான உறவு என்பது, சமயம் சார்ந்த பக்திப் பிரச்சாரமாகவும் இயல்பிலிருந்து விலகி தனிமனிதத் தோழன் என்கிற ‘சர்க்கஸ்’ மனோபாவத்துடனும் சித்தரிக்கப்பட்டன.
வனம் மற்றும் மலைப் பகுதிகளை ஒட்டிய பழங்குடி மக்களின் வாழ்விடங்களுக்குள் நுழைந்து, அவர்களுடைய வேளாண்மையை யானைக் கூட்டம் நாசம் செய்வதையும் அவற்றை விரட்டியடிப்பதற்கு, பயிற்றுவிக்கப்பட்ட ‘கும்கி’ யானைகள் பயன்படுத்தப்படுவதையும் புத்தாயிரத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பிரபு சாலமன். அதில், யானைகளை வைத்திருப்பவர்கள் அவற்றைப் பிச்சை பெறவும் பழக்கப்படுத்தியிருக்கும் இழிவைப் பகடி செய்திருந்தார்.
ஆசியாவில் யானைகள் இன்னும் உயிர் வாழ்வதற்கு இந்து சமயத்தில் அது கடவுள் நிலையில் வைக்கப்பட்டிருப்பது பற்றி ஆவணப்படங்கள் பேசியிருக்கும் அளவுக்குத் திரைப்படங்கள் எதுவும் பேசவில்லை. அதேபோல் யானைகளின் வாழ்க்கை முறை குறித்தோ, இயற்கைக்கும் மனிதர்களுக்குமான சமநிலையை உருவாக்குவதில் யானைகளுக்கு இருக்கும் பங்கு குறித்தோ தமிழ் உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் எதுவும் பேசவில்லை. அதைக் ‘காடன்’ படத்தில் காடன் என்கிற கதாபாத்திரம் வழியாக அரைகுறையாகப் பேசியிருந்தாலும் முதல் முறையாகப் பேசியிருப்பதற்காக இயக்குநர் பிரபுசாலமனைப் பாராட்டலாம்.மனிதர்களும் அவர்களுடைய லாப வேட்டையும்தான் யானைகளுக்கு எதிரி. ஏனென்றால் அவை வசிக்கும் காடுகள், அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில், கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், கேளிக்கை விடுதிகள், ஆன்மிக மையங்கள் எனக் கட்டிடங்களைக் கட்டும்போதும், ரயில் பாதை, சாலை வசதி உருவாக்குவது போன்ற காரணங்களாலும் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவையும் தண்ணீரையும் தேடி அவை தினசரி 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வழித்தடங்கள் வளர்ச்சி என்ற பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் யானைகள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடுவதற்கும் இனப்பெருக்கம் செய்யவும் பயன்படுத்தும் வலசைப் பகுதிகளும் ஆக்ரமிக்கப்பட்டுவிடுவதால் அவை வேறு வழியின்றி உணவையும் தண்ணீரையும் தேடி ஊர்களை நோக்கிப் படை எடுக்கின்றன. விளைநிலங்களுக்குள் வருகின்றன.யானைகளின் இந்த வாழிடப் பிரச்சினை குறித்து காடன் கதாபாத்திரம் வழியாக வகுப்பு எடுக்கிறார் பிரபு சாலமன். காடனை டெல்லி மாநகர வீதியில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக, சூப்பர் மேனாகச் சித்தரிக்கும் அவர், கார்ப்பரேட் , அரசியல் மாஃபியா தலைவரின் மிகச்சாதாரண சூழ்ச்சிகளிலிருந்து அவரால் தப்பித்துக்கொள்ள முடியால் போவதுபோல் காட்டுவது அப்பட்டமான கேரக்டர் ‘அசாசினேஷன்’. மனநல மருத்துவமனையில் அவர் ‘எலெக்ட்ரிக் ஷாக்’ பெரும் காட்சியெல்லாம் ‘சோட்டா பீம், மோட்டு பட்லு’ ரசிகர்களுக்கானவை.
யானை டாக்டர் என்று வருணிக்கப்படும் விலங்கியல் மருத்துவர், வி.கிருஷ்ணமூர்த்தியைக் கொஞ்சம் நினைவூட்டும் விதமாக காடன் கதாபாத்திரத்தை எழுதியிருக்கும் இயக்குநர், வி.கிருஷ்ணமூர்த்தியைப் பெருமைப்படுத்தும்விதமாக ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதையின் தாக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல காசியாபாத், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் உட்பட இந்தியாவில் வனம் மற்றும் மலைப்பகுதிகளை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களை வில்லன் தரப்பாக திரைக்கதையில் நுழைத்திருக்கிறார்.
வன அமைச்சர் நினைத்தால் நடுக்காட்டில் ஒரு நகரத்தை உருவாக்கலாம் என்கிறார். இதையெல்லாம் கூட தவறென்று சொல்வதற்கில்லை. ஆனால், கதாபாத்திரங்களை விட்டேத்தித்தனமாக கையாண்ட விதமே இந்தப் படத்தை ஒரு சராசரி செய்தி சொல்லும் கமர்ஷியல் சினிமா ஆக்கியிருக்கிறது. எந்தக் கதாபாத்திரத்துக்கு முழுமையைக் கொடுக்கத் தவறிவிட்டார். அவற்றை அரைகுறையாக எழுதியிருக்கும் இயக்குநர். இதில் உச்சபச்ச ஏமாற்றம் யானைகளே தங்களுக்காகப் போராட முன்வருவதுபோல ‘இராம.நாராயணன்’ ஸ்டைலுக்கு மாறிவிடும் இறுதிக் காட்சி.கதாபாத்திரங்களைத்தான் கமர்ஷியல் சினிமாவுக்காக இப்படி வளைத்திருக்கிறார் என்று ஆறுதல் அடைந்துகொள்ளலாம் என்றாலும் பழங்குடி மக்களைப் பற்றிய சித்தரிப்பு அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தேன்’ போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்களும் ஆஸ்கர் வரை சென்றிருக்கும் ‘ம்ம்ம்ம்’ உள்ளிட்ட சில மலையாளப் படங்களும் மலை மற்றும் வனவாழ் பழங்குடிகளின் அசலான வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்தரித்திருக்கின்றன. அவற்றுக்கு நேர்மாறாக ‘காடன்’ படத்தில் அவர்கள் துணை நடிகர்களாக வந்து போகிறார்கள்.
காடனே கதையின் நாயகனாக இருக்கிறார். இணை நாயகனாக ‘கும்கி’ மாறன் என்கிற கதாபாத்திரத்தில் வரும் விஷ்ணு விஷாலுடைய காதல் போதையில் துளியளவு கூட அழுத்தம் இல்லை. கிட்டத்தட்ட மனப்பிறழ்வுடன் தனது கும்கி யானையை கூலிக்கு பலியிடும் ஒருவராகக் காட்டியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் விட்ட குறை தொட்ட குறையாக இயக்குநராலேயே கொன்றொழிக்கப்பட்டுவிடுகிறது.படத்தில் பிரபு சாலமனைப் பாராட்டும் இடம் ஒன்று உண்டென்றால் விளிம்பு மக்களில் பலர் ஆயுதம் தாங்கிப் போராடும் தலைமறைவுப் போராளிகளாக மாறிப்போகும் அவலத்தை துணிவுடன் சுட்டியிருப்பது. ஆனால், அதுவும் முதன்மைக் கதையுடன் பெரிதாக ஒட்டவில்லை. கதையின் நகர்வுக்கும் அது உதவவில்லை. ஒரு பெண் போராளி, ஒரு சுற்றுச்சூழல் செய்தியாளர் என இரண்டு பெண் கதாபாத்திரங்களை கறிவேப்பிலை அளவுக்கு கதையில் நுழைத்திருப்பது தனியே தொங்கிக் கொண்டிருக்கிறது.வனக் காவல் அதிகாரி தொடங்கி வில்லன், போலீஸ் வரை இதுவரை இந்திய மசாலா சினிமா சொல்லி வந்திருக்கும் அதே வார்ப்படத்தில்தான் காடனின் எதிரிகள் வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். சலிப்புடன் நகரும் இந்தப் படத்தில் ‘காடன்’ ஆக நடித்திருக்கும் ராணாவின் நடிப்பை ரசிக்க முடிகிறது. விஷ்ணு விஷால் தனக்குக் கொடுக்கப்பட்டதைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்.
படத்தின் பெரும்பகுதி வனம் சார்ந்தே நகர்வதால் வனக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த வகையில் ஏ.ஆர்.அசோக்குமார் பாராட்டுக்குரியவர். அதேபோல் ஒலி வடிவமைப்பு செய்திருக்கும் ரசூல் பூக்குட்டி, பாடல்கள், பின்னணி இசை வழங்கியிருக்கும் சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களின் பங்கு கதையைத் தூக்கிப்பிடிக்கவோ, கதையை நகர்த்தவோ எந்த வகையிலும் உதவிடவில்லை.வனத்தையும் விலங்குகளையும் மனிதக் கதாபாத்திரங்களுடன் இணைக்கும் இந்தப் படத்தில் எது கிராஃபிக்ஸ், எது உண்மையான காட்சி என்று பகுத்தறிய முடியாதபடி விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அமையவேண்டும். அதில் மொத்தமாகப் பின்தங்கிவிடுகிறது இந்தப் படம்.
குறைகளும் நேர்த்தியின்மையும் மலிந்திருந்தாலும் ‘காடன்’ சொல்லவரும் செய்தியின் முக்கியத்துவத்துக்காக இப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்.

Related posts