ராஜபக்ஷ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே தீர்மானத்தின் நோக்கம்

ஜெனீவா பிரேரணை குறித்து சபையில் அமைச்சர் தினேஷ்

புவியியல் ரீதியாக தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான சில நாடுகள் பலவீனமான நாடுகளை மனித உரிமை விவகாரங்களின் ஊடாக நசுக்குவதற்கு முற்படுவதே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையின் இறைமைக்கும், சுயாதீனத்துக்கும் எதிரானதென்பதுடன் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலையை உருவாக்குவதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவின் அரசாங்கத்துக்கு சிக்கல்களை ஏற்படுவதுமே இத்தீர்மானத்தின் நோக்கமாகும். அதனால் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிப்பதுடன், உள்ளகப் பொறிமுறையினூடாக நாம் விசாரணைகளை மேற்கொள்வோமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 கீழ் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

30 வருட கால யுத்தம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் முற்றாக தோற்கடிக்கப்பட்டு சிங்களம், தமிழ்,முஸ்லிம் என அனைத்தின மக்களும் ஒற்றுமையாக சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால், தனி ஈழத்தை உருவாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்றும் அதே நோக்கத்துக்காக சர்வதேச ரீதியில் ஈடுபடுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் ஏனைய நிறுவனங்களுடன் இலங்கை நீண்டகாலமாக உறவை பேணி வருகிறது. இறுதி யுத்தத்தின்போது பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தனர். எமது இராணுவத்தினரே அவர்களை தங்களது தோல்களில் சுமந்து பாதுகாத்தனர். இராணுவத்தினர் அத்தகைய வீரமிகு தியாகத்தை மேற்கொண்டனர். புலிகள் அந்த மக்களை வலுக்கட்டாயமாகவே வைத்திருந்தனர்.

Related posts