த்ரிஷ்யம் 3’ கிளைமாக்ஸ் தயார்..

த்ரிஷ்யம் 3’ உருவாகுமா என்ற செய்தியாளார்களின் கேள்விக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் பதில் அளித்துள்ளார்.
மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விறுவிறு திரைக்கதையும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.
பிப்.19ஆம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘த்ரிஷ்யம் 2’ ரீமேக் உறுதியாகிவிட்டது. தமிழில் ‘பாபநாசம் 2’ குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் நேற்று (26.02.21) ஜீத்து ஜோசப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் வருமா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு ஜீத்து ஜோசப் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: ‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ‘த்ரிஷ்யம்’ எடுத்து முடிக்கும்போது ‘த்ரிஷ்யம் 2’ உருவாகும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியபோது இரண்டாம் பாகத்துக்கான கதை சாத்தியமானது.
அதேபோல ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகத்துக்கு இப்போதைக்கு என்னால் வாக்குறுதி தரமுடியாது. ஆனால், நல்ல கதை தோன்றினால் நிச்சயம் மூன்றாம் பாகம் எடுப்பேன். ஆனால், கண்டிப்பாக லாபத்தை நோக்கமாகக் கொண்டு அந்த முயற்சியில் இறங்கமாட்டேன். கதை எனக்குத் திருப்தியாக இருந்தால் மட்டுமே அதைப் படமாக்குவேன்.
ஒருவேளை ‘த்ரிஷ்யம் 3’ சாத்தியமானால் அதற்கு ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு எடுத்துக்கொண்ட நாட்களை விட குறைவான நாட்களே எடுத்துக்கொள்வேன்.
மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் காட்சியை இப்போதே யோசித்துவிட்டேன். ஆனால், கிளைமாக்ஸ் மட்டுமே. அதை மோகன்லாலிடம் சொன்னபோது அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமானால் அதற்கான சிறப்பான கதை ஒன்றை உருவாக்க வேண்டும். மூன்றாம் பாகத்தை வெறும் கடமைக்காக எடுக்கக் கூடாது. அதற்கு முயற்சி செய்வேன். சரியாக வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுவேன்”.
இவ்வாறு ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

Related posts