ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றோம்

முப்பது ஆண்டுகால யுத்தத்தை, முடிவுக்கு கொண்டுவருவதற்கான மனிதாபிமான நடவடிக்கையின் போது ஏதேனும் அநீதி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து உள்ளக மட்டத்தில் விசாரணையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி கலகெதர பிரதேச சபையின் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி காலத்தில் இந்த நோக்கத்திற்காக இரண்டு விசாரணைகள் நடத்தப்பட்டது. எனினும் கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் அச்செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டது.

மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உள்ளக விசாரணையில் அநீதி நடந்ததாக கண்டறியப்பட்டால் அரசாங்கத்தினால் அதுதொடர்பில் நியாமான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அல்லாமல், புலம்பெயர்ந்த தமிழர்களின் பக்கச்சார்பான குற்றச்சாட்டுகளை ஏற்க அரசாங்கம் தயாராக இல்லை.

மேலும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லை என்பதை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

லிபியா மற்றும் சிரியாவுக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்பதை உலகம் கண்டுள்ளது. இக்கொலைகளில் சம்பந்தப்பட்ட அந்த நாடுகள் குறித்து எந்த விசாரணையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

—–

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற கட்டளைக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேசங்களை சேர்ந்த பொலிசார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள். முல்லைத்தீவுப் பொலிசாரால் நேற்று AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய அறிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில மக்கள் பிரதிநிதிகள் சிலரின் பெயரும் மதத்தலைவர்களின் பெயரும் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ் வழக்கின் மீதான விசாரணையினை எதிர்வரும் 17.06.2021 திகதியிட்டு மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை நீதிமன்றிலும் பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அறிக்கை மீதான விசாரணைகள் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றதை அடுத்து பருத்தித்துறை பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு பொலிஸ் நிலையங்களின் வழக்குகளும் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு விசேட, யாழ்.விசேட நிருபர்கள்

Related posts