கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கம்

கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கப்பட்டதற்கு, அவர் விதிகளை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹானா டுவிட்டுக்கு பதில் தெரிவித்து தனது பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என மிகக் கடுமையாக சாடி இருந்தார்.

இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதிய வேளாண் சட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த சில பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா ரனாவத் விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts