இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸின் தலைமையிலான குறித்த விசாரணை குழு இம்மாதம 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

——-

சசிகலாவை சுற்றி எழுகின்ற விடை புரியாத கேள்விகள்!

சசிகலாவுக்கு 10நாட்களாக சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது தம்பி திவாகரன் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. அப்படியானால் பத்து நாட்களாக சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் டி.டி.வி தினகரன் என்னவென்றால், “சசிகலா உடம்புக்கு ஆபத்து இல்லை. அவருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இதனால் மன்னார்குடி உறவுகள் மட்டுமல்லாமல் அ.ம.மு.கவினரும் கவலை கொண்டுள்ளனர். உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவில்லை. தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழக அரசியலில் இருப்பவர் சசிகலா. அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலே தலைகீழாக மாறிப் போய் விடும். அதற்காகத்தான் பலரும் காத்துக் கிடக்கின்றனர். இதைத்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கூட சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. உண்மையில் சசிகலாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கொரோனா இல்லை என்று சொல்லி விட்டார்கள். இருந்தாலும் ஒக்சிஜன் மட்டம் குறைந்திருப்பது ஏன்? அவருக்கு மூச்சுத் திணறல் வருவது ஏன்? அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை போயிருப்பது ஏன்? நீண்ட நாட்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லையா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. சசிகலாவுக்கு வேறு உடல் உபாதைகள் ஏதாவது இருக்கின்றதா? அவருக்கு இரத்த அழுத்தம் இருக்கின்றதா அல்லது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அளவுக்கு ஏதாவது சம்பவம் நடந்து விட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் கூடவே எழுகின்றன. தன்னைச் சுற்றி பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருப்பது சசிகலாவுக்குத் தெரியுமா? ஒருவேளை அது தெரிந்துதான் அவருக்கு மனஅழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்து விட்டதா என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.

எது எப்படியோ சசிகலா திரும்பி வர வேண்டும், அதுவும் பழைய வைராக்கியத்துடன் வர வேண்டும், ஆரோக்கியமாக திரும்ப வேண்டும் என்று மன்னார்குடி உறவுகள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். ஒரு பக்கம் அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸால் மன்னார்குடி வட்டாரமே நேற்றுமுன்தினம் பரவசமாகக் காணப்பட்டது. ஆனால் அதே மண்ணின் மகளான சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் என்று கேள்விப்பட்டதும் மன்னார்குடி மக்கள் சற்றே பதற்றமாகி விட்டது உண்மைதான்.

—–

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம்

பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில், கவர்னர் தாமதம் செய்வதால் சுப்ரீம் கோர்ட்டே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் நடராஜன் வாதம் செய்தார்.

இந்நிலையில் நேற்று ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, “அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர். 7 பேரை விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார்” என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குழப்பமான உச்ச நீதிமன்ற உத்தரவால் பேரறிவாளன் தரப்பு முறையிட்டதையடுத்து இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts