உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 21.01

மனித பயமும் தேவனும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன். எரேமியா 1:8.
அலைகள் வாசகநேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

இன்றைய தியானத்தை முழுவதுமாக விளங்கிக்கொள்ள வேதப்புத்தகம் உள்ளவர்கள் எரேமியா 1ம்அதகாரத்தை வாசித்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.

மீண்டும் ஓர் புதுவருடம் மலர்ந்து விட்டது. இந்தப் புதுவருடத்தை நீங்கள் எப்படி வரவேற்கிறீர்கள்? புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பவர்களும் உண்டு. அதேநேரம் அதனை பயத்துடன் எதிர்நோக்குகிறவர்களும் உண்டு. பயமானது சாதாரண மனித வாழ்வில் ஏற்படும் அனுபவமாகும். பயம் சிலவேளைகளில் மனிதர்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் இருக்கும். பயம் நமக்கு இல்லாவிட்டால் பாதையில் போகும்போது எதிரேவரும் வாகனத்தைக் குறித்த சித்தனை, எண்ணமே நமக்கு இருக்காது. அதன் விளைவு கவலையீனமாக நடந்து கொள்வதினால் ஆபத்துக்களை சந்திக்க வேண்டிவரும்.

இப்படிப்பட்ட இயற்கையான பயஉணர்வை தேவன் நமக்கு நம்முடைய பாதுகாப் பிற்காக தந்துள்ளார். அதேபோல நடக்காததை நடந்ததுபோல எண்ணிக்கொள்ளும், அதாவது நாமே அச்சத்தை உண்டுபண்ணிக் கொண்டுள்ளுகிற பயங்களும் நமக்கு தீமையை வருசிக்கக்கூடிய பயங்களாகும். இன்று கொரோனா பயம், நாட்டில் அமைதியின்மை மிகப்பெரிய பயத்தை தமிழ்மக்களுக்கு அனிக்கிறது.

ஒருதடவை தனிமையில் பலதுன்பங்கள் மத்தியில் வாழும் விதவைப் பெண்ணிற்கு ஆறுதல் கூறும்படியாக குடும்பமாக சென்றிருந்தோம். அவர்களின் பயம், வாழ்க்கை யில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களினூடானதாகும். அதேநேரம் பலகற்பனை களின் நிமித்தமாகவும் என அறியமுடிந்தது. ஆறுதல்கூறி அமைதியான வாழ்விற்கு அழைத்துச் செல்ல முயன்றேன். அவர்களின் கற்பனையான வாழ்கையால் அமைதியைக்காண முடியாமல் தவிக்கிறார்கள்.

அதேநேரம் மானிடவாழ்வில் பிறப்பில் இருந்து மரணம்வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் பலவகையான பயங்கள் நம்மை பாதிக்கின்றன. அவைகள் இயற்கையானது. நாம் தேவனைச் சார்ந்து வாழும்போது அவ்வாறன பயங்கள் எம்மை பாதிக்காது.

பிரியமான வாசகநேயர்களே, இன்று உங்கள் உள்ளத்தை சூழ்ந்து இருப்பது என்ன? உண்மை என்னவெனில், ஒருவருக்கு பயத்தை ஏற்ப்படுத்துவது, அவருக்கு ஏற்படும் பாதகமான அனுபவங்கள் அல்ல. மாறாக அவருக்குள் இருக்கும் தவறான நம்பிக்கையே பயத்தை ஏற்ப்படுத்துகிறது. இதனையே மேலே வாசித்த வேதப்பகுதி நமக்கு தெரியப்படுத்துகிறது. (வச. 6). நாமும் தேவனின் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் இவ்வாறான தவறான நம்பிக்கையால் எமக்குள் பயத்தை ஏற்படுத்துகிறோம். இதன் விளைவாக பலர் தேவனிடம் இருந்து ஆறுதலை, நன்மைகளை அடையமுடியாமல் இன்று தவிக்கிறாதுகள்.

இதனை நன்கு உணரும்படியாக சாதாரணமாக நாம் கண்டகாட்சியை தெரியப்படுத்த விரும்புகிறேன். தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை மற்றவர்கள் தூக்கமுற்படும்போது பயந்து அழும். காரணம் குழந்தைக்கு தெரியும் தனது தாயிடம் மட்டுந்தான் தனக்கு பாதுகாப்பு உண்டென்று. அதுதான் அதன் நம்பிக்கை. ஒரு தாயைப்போல அரவணைத்து நடத்தும் கர்த்தர் நமக்கு உண்டு. அதனை நாம் ஏசாயா 66:13இல் காணலாம். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்என நம்தேவன் உறுதி யளிக்கிறார்.

தேவன் நமது மீட்புக்கான சகலவற்றையும் சிலுவையில் செய்து முடித்து விட்டார். அந்த மீட்பைப் பெற்றுக்கொள்ள நாம் எமது வாழ்வில் தீர்மானம் எடுக்க வேண்டும். வேதம் சொல்கிறது, அவர் நமது இயதக்கதவில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறார் என்று. இயேசுவை உள்ளே அழைக்க கதவைத் திறப்பதா? வேண்டாமா? கதவைத் திறந்து உள்ளே அழைப்போமானால் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கவேண்டியவர்களாக இருப்போம். அத்தீர்மானங்கள் எமக்கு தேவனிடத்தல் இருந்து நன்மைதரக் கூடியவைகளாக இருக்கும்.

நமது தேவன் வலுக்கட்டாயமாக எதனையும் மனிதருக்குள் திணிக்கிறவர் அல்ல. முழச் சுதந்தரத்தையும் எமக்கு கொடுத்துள்ளார். நாம் அவர் சித்தத்திற்கு எம் வாழ்வை அர்ப்பணித்தால், அவர் நம்மை தமது சித்தத்திற்கு ஏற்றபடியாக வழிநடத்துவார். இல்லையானால் அவர் நம்மை கட்டாயப்படுத்த மாட்டார்.

நாம் வாசித்த முதலாம் அதிகாரம் இதனை எமக்கு தெளிவாக கூறுகிறது. ஆகவே இப்புதிய ஆண்டில் நல்ல தீர்மானமாக தேவன் வாழுமிடமாக எமது இதயதவாசலைத் திறந்துகொடுத்து, அவர் தமது சித்தத்தை எம்மைக் கொண்டு செய்ய எம்மை நாம் ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடக்கூடிய வழியை எனக்கு கற்றுத்தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. உமது சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்து வாழ எனக்கு உதவி செய்யும்படியாக மன்றாடி நிற்கிறேன் பிதாவே ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts