கற்றுக் கொள்ளுமா தமிழ்த் திரையுலகம்?

பட வெளியீட்டுக்கு ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரையுலகினரும் வாழ்த்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
சுப்பு இயக்கத்தில் சாய் தாரம் தேஜ், நபா நடேஷ், ராஜேந்திர பிரசாத், ராவ் ரமேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸோலோ ப்ரதுகே ஸோ பெட்டர்’.
மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு தெலுங்குப் படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை (டிசம்பர் 25) தான் ‘ஸோலோ ப்ரதுகே ஸோ பெட்டர்’ என்ற தெலுங்குத் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரையுலகினருமே வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு தொடங்கி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் எனப் பலரும் ‘ஸோலோ ப்ரதுகே ஸோ பெட்டர்’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.
இதேபோன்றதொரு பாராட்டு தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளதா என்றால் இல்லை. பல்வேறு சங்கங்கள் தொடங்கி ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கே தமிழ்த் திரையுலகில் நேரமில்லை. ஆனால், தெலுங்குத் திரையுலகில் நீண்ட நாட்கள் கழித்து ஒரு படம் வெளியாவதால் மற்ற அனைவரும் இணைந்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இப்படியொரு நிலை தமிழ் சினிமாவுக்கு என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலம் எனலாம். இப்போது அப்படியில்லையா என்றால், கண்டிப்பாக இல்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் படத்துக்கு மட்டும் இதர சில நடிகர்கள் சிலர் வாழ்த்து சொல்வார்கள். மற்றவர்கள் அனைவருமே அமைதிதான்.
அதிலும் தயாரிப்பாளர்கள் நிலையே தலைகீழ்தான். ஒரு படம் வெளியாகும்போது, மற்றொரு தயாரிப்பாளர் வந்து உதவும் காலம் எல்லாம் இப்போது இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டும் சில உதவிகளைச் செய்யலாமே தவிர, மற்றவர்கள் அனைவருமே என்ன வசூல், என்ன லாபம் என்று கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள்.
தெலுங்குத் திரையுலகம் போன்ற ஒற்றுமை என்பது தமிழ்த் திரையுலகில் இப்போதைய சூழலில் வாய்ப்பே இல்லை. அப்படியான சூழல் கனவில் வேண்டுமானால் சாத்தியமுண்டு.

Related posts