மகிழ்ச்சியில் ‘மாஸ்டர்’ படக்குழு

‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விவரங்கள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஓடிடி வெளியீடு என்று பலமுறை வதந்திகள் வெளியாகி வந்தன. இறுதியாக, திரையரங்குகளில்தான் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதனால் இந்தப் பிரச்சினை திடீரென்று உருவானது, படக்குழு அறிக்கை வெளியிட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. என்னவென்றால், ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
இதை அறிந்துகொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ‘மாஸ்டர்’ படத்தின் மீது எவ்வளவு பணம் முதலீடு இருக்கிறது, கரோனா ஊரடங்கினால் எந்த அளவுக்குப் பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களையுமே திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார்.
ஆனால், ‘மாஸ்டர்’ படம் வெளியானால்தான் மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்குவார்கள். தற்போது வெளியாகியுள்ள படங்கள் எதுவுமே மக்களைத் திரையரங்கிற்கு அழைத்து வரவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இறுதியில் திரையரங்க வெளியீட்டுக்குத் தங்களுடைய தரப்பில் அனைத்து ஆதரவையும் தருவதாக ‘மாஸ்டர்’ தயாரிப்பாளருக்கு வாக்குறுதி அளித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
இந்த வாக்குறுதியைத் தொடர்ந்தே, ‘மாஸ்டர்’ படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு ஜனவரி 13-ம் தேதி ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்தத் தேதியில் தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்குகளில் சுமார் 80% அளவுக்கு ‘மாஸ்டர்’ படத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குத் திரையரங்க உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கொடுத்த வாக்குறுதியால் ‘மாஸ்டர்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts