திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’

திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் சூரரை போற்று முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய படங்களை வெளியிடும் திருட்டு இணையதளங்கள் திரைத்துறைக்கு பெரிய வில்லன்களாக நிற்கின்றன. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களும் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்திலேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி பட அதிபர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தின. இவற்றை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கைகள் எடுத்தும் முடியவில்லை. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரை போற்று படமும் திருட்டு இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை நேற்று முன்தினம் இரவு ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டனர். சில மணி நேரத்திலேயே முழு படமும் திருட்டு இணையதளத்தில் வந்தது. தியேட்டர்களில் திருடுவதை விட ஓ.டி.டி. தளத்தில் விரைவாக திருடி எச்.டி. தரத்திலேயே வெளியிட்டு விடுவதாக கூறப்படுகிறது. சூரரை போற்று படத்தை சூர்யாவே தயாரித்து இருந்தார். படத்தை தியேட்டரில் வெளியிடவே திட்டமிட்டனர். ஆனால் கொரோனாவால் தியேட்டர்களை திறக்க தாமதமானதால் சில வாரங்களுக்கு முன்பு ஓ.டி.டி. தளத்துக்கு விற்று விட்டனர்.

Related posts