உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 34

உன்னைத் தேடும் கடவுள்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன்

வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19;:10.

இன்றைய சிந்தனையை நன்றாக விளங்கிக் கொள்ள லூக்கா 15ம் அதிகாரத்தை வாசிக்கவும். நமது ஆண்டவராகிய இயேசு இவ்வுலகத்திற்கு வந்ததின் நோக்கம், மனுக்குலம் இழந்து போயிருக்கும் தேவனுடனான தொடர்பைத் தேடவும், பாவத்தின் நிமித்தம் தேவனுடனான ஐக்கியத்தை, பாராமரிப்பை இழந்து வாழும் மக்களை இரட்சிப்பாகிய தேவனுடைய பராமரிப்புக்குள் கொண்டுவரவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார். இதனை வேதம் இவ்வாறு சொல்கிறது. பாவிகளை இரட்சிக்க இயேசு உலகிற்கு வந்தார். உலகத்தை மீட்கும்படியாக தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தார். பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார். இழந்து போனதை தேடும்படியாக வந்தார்.

உலகம் சமாதானத்தை, அமைதியை, நிம்மதியை, சுபீட்சத்தை தேடுகிறது. நம் ஆண்டவராகிய இயேசுவோ நம்மைத் தேடுகிறார். நம் ஆத்துமாவின் இரட்சிப்பைத் (மரணத்தின் பின்னான நித்தய வாழ்வைத்) தேடுகிறார்.

நம் ஆண்டவர் அன்புள்ளவர். அதே நேரம் நம் யாவரின் அன்புக்காக ஏங்குகிறவர். நாம் பாவப்பிடியிலும் பிசாசின் பிடியிலும் அகப்பட்டு பாதாளத்திற்குள் (நரகத்திற்குள்) இறங்குவதை எப்படி அவர் தாங்கிக் கொள்வார். ஆகவேதான் அவர் உன்னையும் என்னையும் தேடுகிறார். காரணம் அவரின் வாக்குறுதி இவ்வாறு மனுக்குலத்தை நோக்கியதாகவுள்ளது. ஸ்திhPயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49:15.

ஏன் ஆண்டவராகிய தேவன் நம்மைத் தேடுகிறார்? பாவவத்தின் சம்பளமாகிய மரணம் என்கிற உளையான சேற்றிலிருந்து நம்மைத் தூக்கி எடுத்து, தம்மோடு ஐக்கியம் கொள்ளும்படியாக நம்மைத் தேடுகிறார். காரணம், மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று தேவனுடைய வார்த்தை எங்களுக்குச் சொல்லுகிறதல்லவா. (லூக்கா15:7).

இந்த லூக்காவின் அதிகாரம் 15 இல் சொல்லப்பட்டதான மூன்று இழப்புக்களைக் குறித்தும், அவர்கள் எப்படி எல்லாம் தேடினார்கள்? எப்படி கண்டுபிடித்தார்கள்? எப்படி அதனை இழந்தவர்கள் பின்னர் மகிழ்ந்தனர் என்பதைக் குறித்து தியானத்து அறிந்து கொள்வதோடு, எம்மைத்தேடும் தேவனை நாமும் தேடி அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்வோம்.

காணமல் போன ஆடு!

உங்களில் ஒரு மனுஷன் நு}று ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணு}ற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத்தன் தோள்களின்மேல் போட்டுக் கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து, காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? (வச. 4-6).

ஆடு எந்தவிதத்திலும் பாதுகாப்பற்ற ஒரு பிராணி. கொடிய விலங்குகளின் கண்களுக்கு எப்போதும் தப்பி வாழ வேண்டிய சூழ்நிலை கொண்டது. ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். தனக்கு இருக்கும் ஆபத்துக்களைக் குறித்து அவை அறிவதில்லை. அதே போலத்தான் மனிதனும் தனக்கு இருக்கும் ஆபத்துக்களைப்பற்றி அறியாமல் ஆட்டைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறான். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம் என்று எசாயா 53:6 கூறுகிறது.

நம்முடைய கர்த்தரே பிரதான மேய்ப்பன். (1பேதுரு 5:4). நாமும் வாசித்த வேதப்பகுதியில் சொல்லப்பட்ட மேய்ப்பன் என்ன செய்தான்? தன்னிடம் உள்ள 99 ஆடுகிளயும் விட்டு விட்டு காணமற்போன ஆட்டைத்தேடி அலைந்து இறுதியில் கண்டுபிடித்தான் என்று. கண்டுபிடித்த ஆட்டை நடத்திக்கொண்டு வராமல், தனது தோளின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டிற்கு வந்து, அயலகத்தரோடு சந்தோசப் பட்டான் என்று பார்க்கிறோம். காரணம் இழந்து போனதை கண்டுபிடித்து விட்டேன் என்கிற மகிழ்சியில். இதேபோலத்தான் நாமும், தேவன் எம்மைத்தேடும் போது நாமும் தேவனைத்தேடி கண்டுபிடிக்கும் போது பரலோகமும் மகிழ்ச்சி அடையும்.

காணாமல் போன வெள்ளிக்காசு!

அன்றியும், ஒரு ஸ்திhP பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டு பிடித்தபின்பு, தன்சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து, காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள் என்பாள் அல்லவா? (வசனம் 8-9).

ஆட்டிற்கு குரல் கொடுத்தால் அதுவும் பதிலுக்கு குரல் கொடுக்கும். ஆனால் காசு பதில் கொடுக்காது. நாம் தேடவேண்டும். அந்த ஸ்திரி எவ்வளவு கரிசனை யோடு தேடினாள் தெரியுமா? இஸ்ரவேலில் திருமனமாகப் போகிற பெண்கள் வெள்ளிக் காசுகளை ஒவ்வொன்றாக பத்து வெள்ளிக்காசுகளை சேர்க்க வேண்டும். பத்து வந்ததும் அதனை ஓர் ஆரமாக சேர்த்து கழுத்தில் அணிவார்கள். அது அவர்களுக்கு அந்தஸ்த்தை கொடுக்கும், திருமணத்திற்கு தயார் என்ற அறிவிப்பையும் கொடுக்கும். ஆனால் அவளோ ஒன்றை இழந்து விட்டாள். அதனால் கண்டுபிடிக்கும்வரை விளக்கைக் கொழுத்தி வீட்டைப் பெருக்கி அதனை கண்டுபிடித்தாள்.

வேதப்புத்தகம் மனிதர்களுக்கு விளக்கு. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங். 119:105. நீங்களும் நானும் செய்ய வேண்டியது, வேதம் என்கிற விளக்கைக் கொழுத்தி, அதாவது அதனை வாசித்து தியானித்து, இழந்து போய் இருப்பதான தேவனுடைய தொடர்பை கண்டு கொள்ள வேண்டும்.

காணமல் போன மகன்!

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்;, காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (வச. 24)

முதலில் ஆடு. அரண்டாவது காசு. மூன்றாவது இளைய மகன். முதல் இரண்டையும் மனிதர்கள் இழக்கலாம். ஆனால் மகனை இழப்பது என்பது தேவனைக்குரியது. ஆஸ்த்தியைப்பிரிப்பது பெற்றோர் இறந்த பிற்பாடுதான். ஆனால் இவனோ உயிருடன் தகப்பன் இருக்கும் போது பிரித்து எடுத்துக் கொள்கிறான். ஒரு நல்ல நோக்கத்திற்காக அல்ல. அதனை தீயவழியில் செலவழிப்பதற்காக. அதனை செலவழித்தான். இறுதியில் தகப்பனையும், தனது வீட்டில் வேலை செய்கிறவர் களையும் நினைக்கிறான். அவன் தனது உள்ளத்தில் தீர்மானம் எடுத்தான் தகப்பனிடம் செல்வது என்று. அதன்படி போகும் போது தகப்பன் பாதிவழிக்கு எதிர்கொண்டு வந்து மகனை அணைத்து அழைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான். (நடந்த முழு விபரங்களையும் மேலே வாசித்து அறிந்திருப்பீர்கள்).

நமது தேவனும் இதே குணாதிசயங்களைக் கொண்டவர். பாவி என்று ஒருவரையும் தள்ளிவிடுபவர் அல்ல. அவர் மனந்திரும்பி வருபவர்களை பார்க்கிற மனதுருக்கம் உள்ளவர். நாம் ஒரு அடி எடுத்து அவரிடம் வரும்போது, அவர் ஆயிரம் அடி எடுத்து நம்மை நோக்கி வந்து அரவணைக்க வாஞ்சையுடன் காத்திருக்கும் தேவன். இன்று அவர், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாஞ்சையுடன் அழைக்கிறார். அந்த அழைப்புக்கு செவிகொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ நாம் எங்களை ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் பரமபிதாவே, இந்த சிந்தனையை வாசித்து தியானித்த ஒவ்வொருவருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. இந்த சிந்தனையை தியானித்த மக்கள், இழந்து போயுள்ள தேவனுடனான தொடர்புகளை மீண்டும் இணைக்கப்பட உதவட்டும். புதிய மகிழ்ச்சியை அலைகள் நேயர்கள் யாவரும் தேவனிடத்தில் கண்டடைந்து, அதற்குள் மகிழ்ந்து வாழ வழி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts