முதல் பார்வை: லாக்கப்

ஒரு கொலையைச் செய்தது யார், எதற்காகச் செய்தார்கள் என்ற காவல்துறையின் விசாரணையே ‘லாக்கப்’.
நீலாங்கரை இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அவரை முன் விரோதம் காரணமாகக் கொலை செய்தது ஒரு ரவுடிதான் என அவரை கைது செய்கிறார் எஸ்.ஐ.வெங்கட் பிரபு. அந்தச் சமயத்தில் காவல்நிலையத்தில் தனது அம்மாவைக் காணவில்லை என்று புகார் அளிக்கிறான் சிறுவன். ஒரு கட்டத்தில் இரண்டு கொலைகளுக்கும் ஒற்றுமையுள்ளது எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் வெங்கட் பிரபும், கான்ஸ்டபிள் வைபவ்வும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். உண்மையில் கொலை செய்தது யார், வெங்கட்பிரபு – வைபவ் இருவரின் பங்கு என்ன, எதற்காகக் கொலை நடந்தது என்பதே திரைக்கதை.
லாக்கப்’ என்றவுடன் லாக்கப் மரணம் பற்றிய கதை என்று நினைத்தால் தவறு. ஒரு கொலை, அதைச் சுற்றி காவல்துறையினர் தங்களுடைய சுயநலத்தினால் எந்த மாதிரி விளையாடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறையில் பதவி உயர்வுக்காக எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடைபெறுகிறது, அதற்கான என்னவெல்லாம் செய்கிறார்கள் எனத் திரைக்கதையின் போக்கில் சொல்லியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதையில் இயக்குநர் சார்லஸ் ஜெயித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், உருவாக்கத்தில் கோட்டை விட்டுள்ளார். குறைந்த பொருட்செலவில் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு படமாக்கியிருப்பது பல காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. மேலும் அவசரமாகப் படமாக்கியிருப்பதையும் உணர முடிகிறது. இதில் எல்லாம் சார்லஸ் கவனம் செலுத்தியிருந்தால் நல்லதொரு த்ரில்லராக ‘லாக்கப்’ ஜொலித்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் இதில் கவனம் செலுத்ததால் கதையில் வரும் ட்விஸ்ட்கள் எதுவுமே ஒட்டவில்லை.
வைபவ், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ் இவர்கள் தான் முக்கியமான கதாபாத்திரங்கள், இதில் வெங்கட் பிரபு நடிப்பு மட்டும் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. அவருடைய நடிப்பில் சிறந்த படம் என்று சொல்லலாம். ஈஸ்வரி ராவ்விடம் பம்முவது, வைபவ்வை மிரட்டுவது என கச்சிதமாக நடித்திருக்கிறார். ஈஸ்வரி ராவ் மிகவும் ஸ்ட்ரிக்டான அதிகாரியாகப் பொருந்தியிருக்கிறார்.
வைபவ்வின் நடிப்பு சுத்தமாகப் பொருந்தவில்லை. முன்பு சொன்னது போல அவசர அவசரமாகக் காட்சிப்படுத்தியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மைம் கோபி, பூர்ணா இருவருக்குமே சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் பெரிதாக வேலையில்லை. கதையின் போக்கிற்கு உதவியிருக்கிறார்கள். முதலில் கண்ணாடி எல்லாம் போட்டுப் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் சிறுவன், இறுதியில் பேசும் வசனங்கள் எல்லாம் பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவது போல இருக்கிறது.
படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். ஆனால், அரோல் குரோலியின் பின்னணி இசை மிகப்பெரிய ஏமாற்றம். படத்தில் உள்ள திருப்பங்களுக்கான பின்னணி இசை எதுவுமே ஒட்டவில்லை. ஒரு நடிகர் நடிக்கும் விதம், வசனம் பேசும் விதம் எனப் பல இடங்கள் நாடகத்தன்மை விரவிக் கிடக்கிறது. இதில் வெங்கட் பிரபு மட்டும் தனது கதாபாத்திரம், வசனம் என அனைத்தையும் உணர்ந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
நல்ல சுவாரசியங்கள் நிறைந்த கதையை உருவாக்கியவர்கள், படமாக உருவாக்கியதில் கோட்டை விட்டுள்ளனர். ஓடிடி தளங்களில் இதற்கு முன்பு வெளியான படங்களை விட இந்தப் படம் பரவாயில்லை என்ற மனதிருப்தி மட்டும் பார்த்தவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Related posts