அஜித் வேண்டுகோள்: கண்டுகொள்ளாத பிரபலங்கள், ரசிகர்கள்

தனது பிறந்த நாள் தொடர்பாக அஜித் விடுத்த வேண்டுகோளை, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்டுகொள்ளவே இல்லை
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு மே 1-ம் தேதி பிறந்த நாளாகும். எந்தவொரு நிகழ்ச்சியிலுமே கலந்துகொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடனே புதுப்படங்களில் ஒப்பந்தமாகிறார் அஜித். மேலும் விமான நிலையம், படப்பிடிப்புத் தளம், அவரது நெருங்கிய நண்பர்களின் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அஜித்தைக் காண முடியும். அதை விட்டால் வெள்ளித்திரையில் மட்டுமே.
இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளின்போது, அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். வால் போஸ்டர்கள், ட்விட்டரில் பிரத்யேகப் படங்கள், ட்விட்டர் ட்ரெண்டிங் என அஜித் புராணமே மேலோங்கி இருக்கும்.
இந்த ஆண்டும் அதேபோல் அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு, சில பிரபலங்களிடம் அஜித் பிறந்த நாள் போஸ்டரை வெளியிட வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அவ்வாறு வெளியிடும் பிரபலங்களுக்கு அஜித்தின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கரோனா சமயத்தில் இந்தக் கொண்டாட்டம் வேண்டாம் என்று அஜித் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிரபலங்கள் யாருமே இதைக் கேட்டதாக இல்லை. அஜித் வேண்டுகோள் விடுப்பதாக அவரது அலுவலகத்திலிருந்து என்று தொலைபேசி அழைப்பு வந்ததோ அன்று மாலையே பிரத்யேக போஸ்டரை பிரபலங்கள் வெளியிட்டனர். அதையும் சிலர் தங்களுடைய ட்விட்டர் முகப்புப் படமாகவும் மாற்றியுள்ளனர்.
இவர்களைத் தாண்டி அஜித் ரசிகர்களோ தொடர்ச்சியாக ட்விட்டர் ட்ரெண்டிங்கிற்குத் திட்டமிட்டு அதில் வென்றும் காட்டினார்கள். அதாவது அஜித் பிறந்த நாள் ட்விட்டர் ட்ரெண்டிங் ஹேஷ்டேகில் சுமார் 5 மில்லியன் ட்வீட்களைக் குவித்தார்கள். கரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் இந்த வேளையில், இதெல்லாம் ஒரு சாதனையா என்று ட்விட்டர் பயனர்கள் பலரும் முகம் சுளித்தனர்.
இதைத் தவிர்த்து, கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பிரத்யேக அஜித் பிறந்த நாள் புகைப்படத்தை மலையாளத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். இதை வைத்து அடுத்து ஒரு ட்விட்டர் ட்ரெண்டிங்கும் உருவாகும். இந்த நிலையைப் பார்க்கும்போது, அஜித் வேண்டுகோளை யாருமே கண்டுகொள்ளவே இல்லை என்பது தெளிவாகிறது.

Related posts