இலங்கை ஊடகங்களில் இன்று கண்ட முக்கிய செய்திகள் 18.04.2020

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் நான்கு அடி நீளம் கொண்ட பெண் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (18) காலை ஏழு மணி அளவில் இனங்காணபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுத்தை புலியினை இனங்கண்ட பொதுமக்கள் 110 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல் வழங்கபட்டமைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்ட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தை புலியினை பார்வையிட்ட போது குறித்த புலி வலையில் மாட்டி பயத்தில் இந்த 20 அடி உயர மரத்தில் ஏறியுள்ளதாகவும் இதனை பிடிக்க மயக்க ஊசி ஏற்றி மரத்தில் இருந்து கீழ் இறக்கபட வேண்டுமென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததோடு குறித்த புலிக்கு ஊசியினை ஏற்ற ரந்தெனிகளை மிருக வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் ஒருவர் வரவழைக்கப்பட உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

——

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு மாத காலம் கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன

மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகைபிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

கடிதங்கள் வகைபிரிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படவுள்ளன. மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

—–

தேசிய பாதுகாப்புக்கு சவாலாக அமைகின்ற எந்த ஒரு செயற்பாட்டையும் செய்வதற்கு ஒரு போதும் பின் நிற்க போவதில்லை என்றும் அவற்றை துணிச்சலோடு தயார் கொள்ள முப்படை உட்பட பொலிசார் தயாராக இரு‌ப்பதாகவு‌ம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் விஷேட அதிதியாக கலந்துகொண்டபோது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவிய போது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனவரி 26 ஆம் திகதி விசேட கூட்டமொன்றை இதுதொடர்பில் நடாத்தி அன்றைய தினமே கொரோனா தொடர்பான குழுவொன்றை ஏற்படுத்தியதாகவும் அந்தக் குழுவை நியமித்து ஒரு நாளின் பின்னர் சீன நாட்டு பிரஜை ஒருவர் முதலாவதாக அடையாளம் காணப்பட்டதாகவும் அதன் பின்னர் இந்நோயில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வலுவான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் அதனால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் இன்று கொரோனாவிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகிய எமது நாடு அதற்கெதிரான செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதனால் எமது நாடு ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. இதற்கு அதிமேதகு ஜனாதிபதி அரசாங்கம் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தமது சேவையை அர்ப்பணிப்புடன் செய்தமை மூல காரணமென்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு எவ்வாறு கொரோனாவை ஒழிக்க முடியும் என்று சில சக்திகள் கேட்டதாகவும் சுகாதாரத்துறை மருத்துவ வசதிகளை வழங்கிய போதும் அதனோடு தொடர்புடைய இணைந்த சேவைகளை வழங்க கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரங்களை கண்டறிய அவர்களது பின்னூட்டல் செயற்பாடுகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தமது ஒத்துழைப்பை பாரியளவில் வழங்கியமை மிக முக்கியமானது என்று இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக ஈரான் தென் கொரியா இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்த முயற்சித்தபோது அவர்கள் அதற்கு பாரிய எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

அது மாத்திரமல்லாமல் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்ல தனியார் பேருந்துகளை சுகாதார அமைச்சு வாடகைக்கு அமர்த்திய போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் என்ற பயந்ததால் அந்த சேவையை வழங்குவதிலிருந்து விடுபட்டார்கள்.

இருப்பினும் இலங்கை இராணுவம் குறித்த சேவையை வழங்க முன்வந்ததுடன் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வருகின்ற சந்தர்ப்பத்தில் இடையிலே தம்புள்ள மைதானத்தில் அவர்களுக்குரிய கழிப்பறை மற்றும் சிறு ஓய்வு வழங்கியபோது அவர்களுக்கு நாம் சிற்றுண்டியை வழங்கினோம்.

அந்த சந்தர்ப்பத்தில் முகப்புத்தகம் ஊடாக எமக்கு இலங்கை இராணுவம் வெறுமனே மென்பொருள் குடிபாணத்தை மாத்திரம் வழங்கியதாக பதிவு செய்தார்கள்.

அதனைத்தொடர்ந்து அவர்களை நாம் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டு சென்று பேருந்திலிருந்து இறங்குங்கள் என்று குறிப்பிட்டபோது யாரும் அந்த இடத்தில் இறங்க முன்வரவில்லை.

அவர்களுடைய காலில் விழாத மாத்திரம்தான்.

எவ்வாறாவது இங்கே இறங்குங்கள் என்று நாம் கூறினோம்.

இறுதியாக அவர்கள் இறங்கினார்கள் எமக்கு பேசினார்கள் அவற்றை எல்லாவற்றையும் நாம் பொறுத்துக்கொண்டு அளப்பரிய சேவையை செய்தோம்.

இருப்பினும் தனிமைப்படுத்தல் முடிவடைந்து செல்லும்பொழுது அவர்கள் நாம் நடத்திய விதத்தை வெகுவாக பாராட்டியதை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டார்கள்.

எனவே பாதுகாப்பு அமைச்சு என்ற அடிப்படையில் எத்தகைய சவாலையும் எதிர்கொண்டு அவற்றை முறியடித்து நாட்டு நலனை முதன்மைப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க தாம் உட்பட சகல படைவீரர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இற்றைவரை 4 நோயாளிகள் மாத்திரம்தான் அதீதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மரணித்து விட்டதாகவும் ஏனைய அனைத்து நோயாளிகளும் சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனாவை ஒழிக்க எமக்கு முடியுமென்றும் இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளை தளபதி, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசிய உளவுப் பிரிவின் பிரதானி ,இலங்கை விமானப்படையின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

-திருகோணமலை நிருபர் கீத்-

Related posts