குணமடைந்தோரின் ரத்தத்தின் மூலம் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளித்த முறையைப் பின்பற்றி தற்போது கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது, கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் ரத்தத்தை எடுத்து, கரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே அந்த நூற்றாண்டு பழமையான சிகிச்சை முறையாகும்.

ஏற்கனவே, தொற்று நோய், அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் சார்ஸ், எபோலா நோய்களுக்கும் இந்த பழைய முறை சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது, கரோனாவுக்கும் இந்த சிகிச்சை முறை சோதித்துப் பார்க்கப்பட உள்ளது.

அதாவது, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களின் ரத்தத்தில், கரோனாவை எதிர்க்கும் பிளாஸ்மா செல்கள் நன்கு வளர்ந்திருக்கும். இவை கரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றியும் கண்ட பிளாஸ்மாக்கள். இவற்றை, குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து எடுத்து, புதிதாகக் கரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தும் போது, கரோனா பாதிப்பு சிகிச்சையில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சிகிச்சை முறையை சீனாவிலும் மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறையைப் பின்பற்ற உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு மட்டுமாவது இந்த சிகிச்சை முறையைப் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இது நிச்சயமாக நல்ல பலனைக் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், வரலாற்றில் இந்த சிகிச்சை முறை பலனளித்திருப்பது சற்று உற்சாகத்தைக் கொடுக்கிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையைச் சேர்ந்த மருத்துவர் அர்டுரோ காஸாடேவால் கூறுகிறார்.

Related posts