ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது மேலும்..

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

——

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்த ஊடக சந்திப்பு அத தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

——

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

—–

தற்பொழுது உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸானது வடக்குப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துமேயாயின் வடக்கில் பாரிய உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நாம் யுத்தத்தாலும் பல்வேறு இடர்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எனினும் மீண்டும் அவ்வாறு அழிவினை நாம் எதிர்நோக்க அதற்கு இடமளிக்க முடியாது.

தமிழ் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடர்பில் அரசினால் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தலுக்கு அமைய அதனைப் பின்பற்றி பொது வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து தேவையற்ற நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருந்து தத்தமது கடமைகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

——–

இன்று (19) அதிகாலை 4.00 மணி முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் விமானங்கள் வருகை தருவது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL. 198 இலக்கமுடைய விமானமே இந்தியாவின் புது டில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமாகும்.

குறித்த விமானத்தில் 77 பயணிகள் வருகை தந்துள்ளனர். இப்பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவின் தம்பதிவ சென்ற யாத்திரிகர்கள் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டிற்கு உள்நுழைவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, இங்கிருந்து புறப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் எரிபொருள் தேவைக்காக மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts