தமிழகத்தில் 2-வது நபருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஏற்கெனவே ஒருவர் கரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்புகள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் 151 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறையும், தமிழக அரசும் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஓமனிலிருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன்பின்னர் 15 வயதுச் சிறுவன் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டார். சோதனைக்குப் பின் கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில் இரண்டாவது கரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து சென்னை வந்த இளைஞரை சோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்ற காஞ்சிபுரம் நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் வீடு திரும்பினார். இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெல்லியிலிருந்து வந்த நபர் நோய்த்தொற்றுடன் வந்ததால் அவருடன் பயணித்தவர்கள், டெல்லியில் அவருடன் பழகியவர்கள் உள்ளிட்ட பலரையும் கண்காணிக்க உள்ளனர்.

Related posts