அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வாணமாகியுள்ளன..!

அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகள் வாணமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரவை பேச்சாளர் 1000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதியை 500 ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாக கூறுகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 69 இலட்சம் பேர் புதிய மாற்றத்தை எதிர்ப்பார்த்து எமது பிரதிவாதியை வெற்றிப் பெறச் செய்தனர்.

இன்று அமைச்சரவை பேச்சாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது 1000 ரூபாய் பெறுமதியான பொதியை 500 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என்று.

எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 3000 ரூபாய் பெறுமதியான பொதி ஒன்றை இலவசமாக பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தனர்.

100 நாட்கள் செல்ல வில்லை. மூன்றாயிரத்தை குறைத்தனர். 1000 ரூபாய் பொதியை 500 ரூபாய் ஆக்கியுள்ளனர். இதில் இருந்தே அவர்களின் பொய், மோசடி தொடர்பில் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

——

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக மன்னார் நகரத்தை அடைந்து மன்னார் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மாபெரும் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவுகள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமும் நீதியும் சகலருக்கும் பொதுவானது, பொதுமன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லையா? என்கின்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

அத்தோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் பயங்கரவாத தடைச்சட்டத்தை சட்டத்தை நீக்க உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

—–

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்தியில் தரித்து விடப்பட்டிருந்த வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

கோண்டாவில் சந்தியில் உள்ள பூட் சிற்றி ஒன்றில் நேற்று (05) இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் பூட் சிற்றியில் வேலை பார்க்கும் முகாமையாளரின் வாகனம் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என வாகன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts