09.01.2020 இன்று வியாழன் முக்கியம் பெற்ற இலங்கை செய்திகள் !

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்றிரவு (08) புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்த அவர், விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர்கள் இருவரும் முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.

அனைத்து துறைகள் தொடர்பிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

—–

இந்திய கடன் உதவி நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்திய கடன் ஆலோசனை முறையின் கீழ் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 50 தொடக்கம் 54 ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பஸ்களையும் 32 – 35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கிடையில் இலங்கை போக்குவரத்து சபையினால் பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க மற்றும் வசதிகளைக் கொண்ட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக தனது தேவையை மீண்டும் மதிப்பீடு செய்து நீண்ட தூர பயணம், நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் உள்ள முக்கிய வீதிகளைப் போன்று கிராமிய பிரதேசத்தில் குறுக்கு பாதைகளில் பயன்படுத்தக் கூடிய பஸ் வகைகள் மற்றும் தேவையின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்திய கடன் திட்ட முறையின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பஸ்களுக்குப் பதிலாக 30 – 35 புதிய 500 பஸ்கள் மற்றும் விநியோகிக்கப்படும் உயரத்தைக் கொண்ட 42 – 45 ஆசனங்களைக் கொண்ட புதிய 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

—–

ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்ததைபோல எனது கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யுங்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றாவிடின் நானும் புறக்கணிக்கப்படுவேன். அரச நிறுவங்கள் மீதான கண்காணிப்பு தொடரும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தவறான வழியில் பயணிக்கும் போது மக்களாலே அந்த அரச தலைவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். கடந்த அரசாங்கம் மக்களின் ஆதரவுடனும், பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் அமைக்கப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமையினால் அந்த அரசாங்கத்தை புறக்கணித்து மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள்.

கோத்தபய ராஜபக்ஷ என்ற நபரை தொடர்ந்து ஜனாதிபதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் முன்னேற்றமும், கௌரவமான வாழ்க்கையினையும், சுய பொருளாதார முன்னேற்றத்தையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாவிடின் நானும் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்படுவேன் என்றார்.

மேலும், ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள், பல விடயங்கள் வெற்றிக் கொள்ள முடிந்துள்ளது. எமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும். அதற்கு எனது கொள்கையுடன் ஒத்துப்போகின்ற பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

21ம் நூற்றாண்டு தகவல் தொழினுட்பத்தை முன்னிலைப்படுத்தி முன்னேற்றமடைகின்றது. அதற்கேற்ற வகையில் இலவச கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வி முறைமையினை இலவசமாக வழங்கினால் தொழிலுக்கான கேள்வி தோற்றம் பெறாது. தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் பதவி காலத்திற்குள் முழுமையான செயற்படுத்துவேன் என மேலும் தெரிவித்தார் .

Related posts