ஈழத்தின் திரைப்படத்துறை நீட்சியாக பிரான்ஸ் தேசத்தில் கருக்கொண்ட திரைப்பட முயற்சி, நான்கு தசாப்தங்கள் தாண்டியும் தொடர்கிறது.
ஈழத்துத் திரைப்படத்துறை 1950ல் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் அதன் வளர்ச்சி என்பது மிகவும் மந்தகதியிலேயே நகர்ந்துள்ளது.
ஈழத்தின் முதலாவது தமிழ்த் திரைப்படம் ‘சமுதாயம்’. இதனைத் தயாரித்தவர் திரைப்பட ஆர்வலரான ஹென்றி சந்திரவன்ச என்ற சிங்களவராவர். இந்தத் தகவலை ‘இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை’ நூலில் தம்பிஐயா தேவதாஸ் பதிவிட்டுள்ளமை மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
இலங்கையில் தயாரிக்கப்பட்டதான முதலாவது தமிழ்த்திரைப்படம் ‘சமுதாயம்’ 1962ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்தத் திரைப்படம் 16 மில்லிமீற்றரில் தயாரிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ‘தோட்டக்காரி’, ‘கடமையின் எல்லை’, ‘பாச நிலா’, ‘ரைக்ஸி ட்ரைவர்’, ‘நிர்மலா’, ‘மஞ்சள் குங்குமம்’, ‘வெண்சங்கு’, ‘குத்து விளக்கு’, ‘மீனவப்பெண்’, ‘புதியகாற்று’, ‘கோமாளிகள்’, ‘பொன்மணி’, ‘காத்திருப்பேன் உனக்காக’, ‘நான் உங்கள் தோழன்’, ‘வாடைக்காற்று’, ‘தென்றலும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘ஏமாளிகள்’, ‘அநுராகம்’, ‘எங்களில் ஒருவன்’, ‘மாமியார் வீடு’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘இரத்தத்தின் இரத்தமே’, ‘அவள் ஒரு ஜீவநதி’, ‘நாடுபோற்ற வாழ்க’, ‘பாதை மாறிய பருவங்கள்’, ‘ஷர்மிளாவின் இதயராகம்’, என 28 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன.
திரைப்படப் பிரதிகள் இல்லை, ஆயினும் இந்தத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை தம்பிஐயா தேவதாஸ் திரட்டி ‘இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை’ என நூலாகப் பதிவாக்கியுள்ளார்.
நாட்டில் நிலவிய போர்ச்சூழலுக்குள், தாயகத்தில் திரைப்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
1983க்கும் – 2009க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சிறந்த பல முழு நீளத் திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. திரைப்படத்துறையிலும் ஈழத்தவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது.
இதே காலகட்டத்தில், புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள், தாம் வாழ்ந்து வரும் தேசங்களிலும் திரைப்படத் தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முன்னோடி நாடாக விளங்கியது பிரான்ஸ். இங்கு 1984லேயே திரைப்படத் தயாரிப்பு முயற்சி தொடங்கி விட்டது.
ஈழத்துத் திரைப்பட வரலாற்றுக்கு வயது 62ஆக இருக்கும் இவ்வேளையில், பிரான்ஸில் ஈழத்தவர்களின் திரைப்பட முயற்சிக்கு வயது 42.
பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து, ஏனைய நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்துத் திரைப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள் திரைப்படத் தயாரிப்புக்களை மேற்கொண்டு, திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இவற்றுக்குள் சில தரமான திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.
இப்பொழுது, தாயகம் குறிப்பாக வடக்குக் கிழக்கு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பில், வேகம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. தொழில் நிலைக் கலைஞர்கள் உருவாகியுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கலைஞர்கள் தற்பொழுது, யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொள்கின்றனர்.
திரைப்படத்துறைக்குரிய கலைஞர்கள் பல்வேறு மட்டங்களிலும் உருவாகி வருகின்றனர்.
திரைப்படத் தயாரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் சக.ரமணா தயாரித்த ‘அந்தோனி’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
‘அந்தோனி’ இந்த ஆண்டில் வெளிவந்து உலகளவில் புகழ்பெற்றுள்ளது.
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வாசுதேவன், தேவதாசன், அரவிந்த் அப்பாத்துரை ஆகியோர் ‘நஞ்சு தின்னி வீதி’ என்ற திரைப்படத்தை முழுமையாகவே அங்கேயே தயாரித்தனர்.
பரிஸ் திரையரங்கில் காண்பிக்கப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இப்பொழுது, உலகெங்கும் வலம் வரும் ‘போராட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற்றுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ‘போராட்டம்’ படத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை, பரிஸ் புறநகர் Villeneuve-La-Garenne – Megarama திரையரங்கில் காட்சியளிக்கும் ‘கலங்கரை’ திரைப்படத்தின் பிரதானமான காட்சிகள், யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் நடிகர்கள் பலர் ‘கலங்கரை’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
‘கலங்கரை’ மன்மதன் பாஸ்கி பற்றி எழுத்தாளர், கவிஞர் – விமர்சகர் மாணி நாகேஸ் எழுதியதை இங்கு வழங்குகிறோம்.
‘நதி’ தொடங்கி ‘கலங்கரை’ வரை
பாஸ்கி என்னும் எமது கலைஞனின் கனவுப்பயணம்.
————————-
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். பாரிஸின் ஒரு நிலக்கீழ் ரயில் நிலையத்துக்குள், ஒரு இளைஞன் குந்தியிருந்து கதறியழுகிறான்.
கண்ணீரும் மூக்கிலிருந்து வழியும் சளியுமாய் என்ன செய்வதென்றறியாது தவிக்கிறான்.. துடிக்கிறான்..
வேதனை, ஆதங்கம், ஏமாற்றம், திகைப்பு, அதிர்ச்சி என எல்லாவித உணர்வுகளாலும் அவன் முகம் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.
எதற்காக? பல லட்சங்களை செலவுசெய்து, பல தடைகளைத்தாண்டி, ஆயிரம் கனவுகள் சுமந்து, பிரான்ஸ் வந்து சேர்ந்தவன், அன்றையதினமே காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மீண்டும் திருப்பியனுப்பப்படும் சூழல்.
அக்கனமிகு வலியின் வெளிப்பாடே அந்த இளைஞனின் இருள்கோலம்.
பாஸ்கி என்ற கலைஞனின் முதல் குறும்படமான ‘நதி’யில் வரும் ஒரு காட்சிதான் மேலே நான் விபரித்தது.
அன்று, அந்த காட்சியில் நடித்து, ஓர் எதிர்கால அற்புத நடிகனை தமிழ் சூழலுக்கு வெளிச்சமிட்டவர்தான் பாஸ்கி என்னும் கலைஞன்.
இன்று, ‘கலங்கரை’ என்கின்ற முழுநீள திரைப்படத்துடன், உங்கள் முன் வந்து நிற்கின்றார்.
இந்த நீண்டகால இடைவெளியின் கலைப்பேரனுபவத்தின் வெளிப்பாடாய் ‘கலங்கரை’ உங்களை மனநிறைவடையச்செய்யும் என்று நானும் நிச்சியமாக நம்புகிறேன்.
ஓர் இசை வாத்தியக்கலைஞனாக தன், தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர். பின் ரி.ரி.என் ‘படலைக்குப் படலை’ தொடர் மூலமாக, ஆயிரக்கனக்கான மக்கள் மனங்களை வென்றவர்.
சமூக வலைத்தளங்களினூடே பிரதானமாக, சிறீ மற்றும் கலைஞர்களுடன் இனைந்து தொடர்ந்து நகைச்சுவை சித்திரங்களினூடே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்.
எமது சமூகத்தின் மறைக்கப்பட்ட இன்னொரு பக்கத்தை, அல்லது முகத்தை ‘அக்கம் பக்கம் செல்பி’’ எனவாக்கி துணிவுடன் வெளிப்படுத்தியவர்.
‘நதி’ குறும்படத்தை தொடர்ந்து, சுமார் பதின்நான்கு குறும்படங்களையும் ‘தீராநதி’ என்ற முழு நீள படத்தையும் இயக்கியிருக்கின்றார்.
பல படங்களில் அவரே முதன்மை பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார்.
அவரது அனேக படங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
எமது மக்களுக்கிடையேயான சமூகச் சிக்கல்கள், நெருக்கடிகள், நோய்கூறுகள் என சமூக அக்கறையோடு, தான் வாழும் சூழலில் பார்த்த அவதானித்த விடயங்களையே பெரும்பாலும் தன் படைப்பாக்கியிருக்கின்றார்.
எங்களின் கதைகளை, நாங்களே பேசியாகவேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பவர்.
பாஸ்கியின் புகலிட நீண்ட திரைப்பயணத்தில் அவரது தீவிர தேடலும் விடாமுயற்ச்சியுமே ஏணிப்படிகளாக அவரை உயர்த்திக்கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம், அது சிறிதோ பெரிதோ பயன்படுத்திக்கொண்டு அதனூடே தொடர்ந்து தன்னை செதுக்கிக்கொண்டேயிருக்கிறார்.
தன்படத்தில் மட்டுமன்றி தாயகத்தில் வெளிவந்த ஆணந்த ரமணனின் ‘ஆறாம் நிலம்’ படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார்.
போருக்குப்பின்னான நிலக்கன்னிவெடிகளை அகற்றும் பணியின் பிரச்சினையை மையமாக கொண்டிருந்த அப்படம் அன்று மிக முக்கியமாக பேசப்பட்டது.
அதேபோல் கனடாவின் முக்கிய தமிழ் இயக்குனரான லெனின் சிவம் அவர்களின் ‘துப்பாக்கியும் மோதிரமும்’ என்றபடத்திலும் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவற்றையெல்லாம் கடந்து தான் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரான்ஸ் சினிமா துறைக்குள்ளும் தனக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு முன்னகர்கின்றார்.
அக்குறிப்பிட்டகாலங்களில் அவர்கள் மூலமாக தனக்குக்கிடைத்த நடிப்புப்பயிற்சியை விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக பயின்றவர்.
மேற்குலக சினிமா அனுபவமும் அத்துறை சார்ந்தவர்களுடனான உறவாடல், உரையாடல்களும் சினிமா சார்ந்த வேறொரு அனுபவங்களையும் பாஸ்கிக்கு கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் வெளிவரவிருக்கும் ‘Paul’ என்ற பிரான்ஸ் படத்திலும் பாஸ்கியின் சிறு பங்காற்றுகை உன்டென அறியமுடிகிறது.
சினிமா சார்ந்தவர்களோடு உரையாடுவது, அவர்களுடைய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது என எப்பொழுதும் அவர் தன்னை வளப்படுத்தி இயங்கிக்க்கொண்டேயிருக்கிறார்.
தமிழக சினிமா ஆளுமைகளோடும் தொடர்பாடல்களை ஏற்படுத்தி தன்னை மென்மேலும் செதுக்கிக்கொண்டேயிருப்பவர்..
குறிப்பாக, அண்மையில் காலமான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் அவர்களுடனான நட்பு, பாஸ்க்கியை பல்வேறு வழியிலும் சினிமா சார்ந்து செழுமையடையச்செய்தது என்றே நான் நிச்சியமாக நம்புகிறேன்.
சினிமாவின் நுணுக்கங்கள், நல்ல உலகத்திரைப்படங்கள் பற்றிய தேடல், வாசிப்பு என பல தளங்களில் தன்னை வளமேற்றிக்கொண்டார்.
செழியனின் இழப்பு, அவரை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதையும் நான் உணர்வேன்.
இப்பொழுது ‘கலங்கரை’ என்ற முழுநீள திரைப்படத்துடன், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலான கடுமையான உழைப்புடன் உருவாக்கி முடித்து, அந்த கலைப்படைப்புடன் உங்கள்முன் வந்து நிற்கிறார், உங்களின் கலைஞன் பாஸ்க்கி.
அவரின் படைப்பை வெற்றிபெறச்செய்வது, உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இப்படத்திலும், புலத்தையும் – நிலத்தையும் இணைத்து எங்களின் கதையை.. எங்களின் வாழ்தல் சிக்கல்களை.. அன்பை, வலியை உணர்வோவியமாய் திரைமொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்.
புலச்சூழலில் எங்களுக்கான துறைசார் சினிமா கட்டமைப்பு ஒன்று இன்னும் சாத்தியமில்லாத சூழலில், தனித்த மனிதராய் பெரும் பொருளாதார சுமையையும் தோள் சுமந்து, இப்படைப்பை பாஸ்கி வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
அவர் தொடர்ந்தும் எங்களுக்கான ஈழசினிமா துறையில் வெற்றிகரமாக பயணிக்கப்போவது உங்களின் கரங்களிலேயே தங்கியிருக்கிறது.
இப்படம், எல்லாவித ரசணை கொண்டவர்களையும், திருப்திப்படுத்தும் என்பதும் எனது திண்ணம்.
நான் அறிந்தவரை நிலம் – புலம் என இப்படத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துத்துறை கலைஞர்களும், தங்கள் பங்காற்றுதலை சிறப்பாகவழங்கியிருப்பதாக அறியமுடிகிறது.
இன்று (11-10-2026) Megarama சினிமாவில் ‘கலங்கரை’யில் சந்திப்போம்..
வாருங்கள்.. பாருங்கள்..
படம் பற்றிய உங்கள் மனக்கதவுகளையும் திறவுங்கள்.
நன்றி,
மாணி.நாகேஸ்
