5 மாதங்களில் ரூ.1,000 கோடி: வசூல் மழையில் மலையாள சினிமா!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரையுலகத்தினர் பாக்ஸ் ஆபீஸில் பின்னடவை சந்தித்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் உலக அளவில் மொத்தமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிரட்டியுள்ளது.

மலையாள திரையுலகத்துக்கு இது பொன்னான ஆண்டு. தொடக்கத்திலிருந்தே ‘ஹிட்’ படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வெளியான எந்தப் படமும் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. ‘அரண்மனை 4’ ஓரளவுக்கு வசூலில் நம்பிக்கை கொடுத்தது.

தெலுங்கு திரையுலகில் ஒற்றை ஸ்கிரீன் கொண்ட திரையரங்குகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியிருப்பதன் மூலம் அந்தத் திரையுலகின் கள நிலவரத்தை புரிந்துகொள்ள முடியும். பாலிவுட்டில் ‘ஃபைட்டர்’, ‘சைத்தான்’, ‘க்ரியூ’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலைத் தாண்டின. திடீரென சர்ப்ரைஸ் ஹிட் கொடுக்கும் ‘கன்னட’ திரையுலகில் இன்னும் அதிசயம் நிகழவில்லை.

மலையாள சினிமா: அப்படியிருக்கும்போது, மலையாள திரையுலகில் இந்தாண்டு வெளியான பெரும்பாலான படங்கள் மலையாள ரசிகர்களைத் தாண்டி வரவேற்பு பெற்றதுடன், வசூலையும் குவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் உலக அளவில் குவிக்கப்பட்ட ரூ.1000 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் கிட்டத்தட்ட 3 படங்கள் 55 சதவீதம் பங்களித்துள்ளன. அவை ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேஷம்’. இந்த மூன்று படங்களும் சேர்ந்து கிட்டதட்ட ரூ.551 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆஃபீஸ்: இந்த பாக்ஸ் ஆஃபீஸ் பட்டியலில் சவுபின் சாயிர், ஸ்ரீநாத் பாசியின் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.240.94 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ரூ.157.44 கோடியை வசூலித்துள்ளது. ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ ரூ.153.52 கோடியை ஈட்டியுள்ளது.
தவிர்த்து, ‘ப்ரேமலு’ ரூ.135 கோடி, ‘வருஷங்களுக்கு சேஷம்’ ரூ.82 கோடி, ‘பிரம்மயுகம்’ ரூ.80 கோடி, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’, ‘அன்வேஷிப்பின் கன்டேதும்’ ஆகிய படங்கள் தலா ரூ.40 கோடி என குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளன. அண்மையில் வெளியான பிருத்விராஜின், ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம் 5 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓப்பீடு: கடந்த ஆண்டில் மலையாள சினிமா மொத்தமாகவே ரூ.500 கோடி வசூலை குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘2018’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘ரோமாஞ்சம்’, ‘நேரு’ ஆகிய படங்கள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த வசூலை ஈட்டின. அந்த வகையில் இந்த ஆண்டு 5 மாதங்களில் ரூ.1,000 கோடியை வசூலித்து முன்னேறியிருக்கிறது மலையாள திரையுலகம்.

Related posts