நினைவுகளை கிளறும் குரங்கு பெடல்

ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ சிறுகதையை தழுவி கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம் ‘குரங்கு பெடல்’. ட்ரெய்லரிலேயே கிராமத்து கதைக்களம், நாஸ்டால்ஜியா அம்சங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் கவனம் ஈர்த்த இப்படம் அந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு முறையாக கடத்தியதா என்று பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டத்தின் கத்தேரி கிராமத்தில் 80களில் நடக்கும் கதைக்களம். மாரியப்பன், செல்வம், மணி, அங்குராசு என்ற நான்கு சிறுவர்கள் பள்ளியின் கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாட தயார் ஆகின்றனர்.

கிராம மக்களால் ‘நடராஜா சர்வீஸ்’ என்று கிண்டலடிக்கப்படும் கந்தசாமியின் (காளி வெங்கட்) மகன் மாரியப்பன் தன் நண்பரகளுடன் சைக்கிள் கற்றுக் கொள்ள முடிவு செய்கிறான். நண்பர்கள் நால்வரும் சைக்கிள் கடை வைத்திருக்கும் மிலிட்டரியிடம் (பிரசன்னா பாலச்சந்திரன்) வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்கின்றனர்.

இதனிடையே ஊரின் பணக்கார வீட்டுச் சிறுவனான நீதிமாணிக்கம் புது சைக்கிள் ஒன்றை வாங்கிவரவே, அவனுக்கும் மாரியப்பனுக்கும் மோதல் ஏற்படுகிறது. யார் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது.

வறுமையான பின்னணியைக் கொண்ட மாரியப்பன் தினமும் சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்காக சில வேலைகளை செய்கிறான். இதனால் அவனுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதிலிருந்து மாரியப்பன் மீண்டானா? முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘குரங்கு பெடல்’.

கதை என்று பார்த்தால் மிக மிக சாதாரணமான ஒரு களம்தான். எந்தவித சுற்றிவளைத்தல்களோ, ஏற்ற இறக்கங்களோ இல்லாத திரைக்கதை.

ஆனால் சின்ன சின்ன நகைச்சுவை வசனங்கள், படம் முழுக்க நம் சிறுவயது அனுபவங்களை அசைபோட வைக்கும் நாஸ்டால்ஜியா அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் தன்னுடைய நோக்கத்தில் ஓரளவு வெற்றிபெறுகிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.

நகர சூழலில் வளர்ந்தவர்களை விட, 80, 90களில் உலகமயமாக்கலின் ஆக்டோபஸ் பிடி இறுகுவதற்கு முந்தைய கிராம பின்னணியில் வளர்ந்த குழந்தைகளால் சைக்கிளின் அருமையை நன்றாகவே உணரமுடியும்.

சைக்கிளுக்கும் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்குமான அந்த உணர்வுபூர்வ பிணைப்பை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குநர். சைக்கிள், படம் முழுக்க கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே பயணிக்கிறது.

பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவர்கள் தான் படத்தின் முக்கிய தூண்கள். அந்தளவுக்கு சிறப்பான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் நால்வரும்.

குறிப்பாக மாரியப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சந்தோஷ் வேல்முருகனும், நீதிமாணிக்கமாக வரும் ராகவன் என்ற சிறுவனும் நடிப்பில் கவர்கின்றனர்.

சிறுவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்களும் படு இயல்பு. படத்தில் அடுத்தபடியாக ஸ்கோர் செய்பவர் குடிகாரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜென்சன் திவாகர்.

அவருக்கும் சைக்கிள் கடை ஓனராக வரும் பிரசன்னா பாலச்சந்திரனுக்கும் இடையிலான காட்சிகள் காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றன. காளி வெங்கட்டுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும் குறைகள் எதுவும் இல்லை.

படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு. கிராமத்து நிலப்பரப்பில் கோடை வெயிலின் சூட்டை சுள்ளென்று உணரவைக்கிறது சுமீ பாஸ்கரனின் கேமரா. படத்தின் தொடக்கத்தில் விவசாய கிணற்றில் சிறுவர்கள் நீந்தும் காட்சி, கிளைமாக்ஸில் மலைப்பகுதியில் சைக்கிள் பந்தயக் காட்சி ஆகிவற்றில் புகுந்து விளையாடியிருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை, படத்தின் ஓட்டத்துக்கு வலு சேர்க்கிறது. பாடல்கள் ஓகே ரகம். சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதியின் கலை இயக்கம் 80களில் கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. தனக்கென தனி மார்க்கெட் உருவாகியிருந்தாலும் எந்தவித நட்சத்திர அம்சங்களும் இல்லாத ஒரு சிறிய படத்தை தனது பேனரில் ரிலீஸ் செய்த சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வாடகை சைக்கிள், சேமியா ஐஸ், குரங்கு பெடல், அம்பாசிடர் கார், டூரிங் டாக்கீஸ் என 80, 90களின் நாஸ்டால்ஜியா அம்சங்களை படம் முழுக்க ஒரு அங்கமாக கொண்டு வந்தது சுவாரஸ்யத்தை கூட்டுவது மட்டுமின்றி நம்முடைய பால்ய நினைவுகளை படம் முழுக்க கிளறிக் கொண்டே இருக்கிறது. இதுவே படத்தின் தொடக்கத்திலேயே நம்மை கதையுடன் ஒன்றவும் காரணமாகிறது.

படத்தின் நோக்கம் கிட்டத்தட்ட இடைவேளைக்கு முன்பே முடிந்துவிடுகிறது. அதற்கு பிறகு வருவதெல்லாம் மாரியப்பன் தான் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிப்பதுதான். இதனால் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் குறைந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக குடிகார கணேசனின் சைக்கிளை கடையில் விடவும் முடியாமல், வீட்டுக்கு போகாமல் மாரியப்பன் அலைந்து திரியும் காட்சியின் நீளம் பொறுமையை சோதிக்கிறது. இதனால் காளி வெங்கட்டிடன் ஏற்படும் மனமாற்றம், க்ளைமாக்ஸ் காட்சி ஆகியவை நெகிழ்ச்சியை தர தவறிவிடுகின்றன.

பசுமையான பால்ய நினைவுகளை தூண்டும்படி அமைக்கப்பட்ட திரைக்கதையில் சுவாரஸ்யமான முதல் பாதியும், நகைச்சுவையும் கைகொடுத்திருந்தாலும், இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் குறைத்து நெகிழ்ச்சியான உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தியிருந்தால் இன்னும் மனதுக்கு நெருக்கமான படமாகியிருக்கும் இந்த ‘குரங்கு பெடல்’.

Related posts