ஏஐ மனிதர்களின் வேலையை பறித்து விடக் கூடாது

ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

‘தி கோட் லைஃப்’ படம் தொடர்பான நிகழ்வில் இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ஏஐ தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்கு பயன்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக உள்ள அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்க முடியும். இப்போது அவர்களுக்கு இதுபோன்ற கருவிகள் உள்ளதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு அதுகுறித்து படிக்க வேண்டிய தேவை இருக்காது.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலைகளை பறிக்காமல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். தலைவர்களாகவும், வேலை வழங்குபவர்களாகவும் யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். கலையில் கூட, நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கான பயணத்தை கற்பனை செய்வது இப்போது மிகவும் எளிதானது. நீங்கள் அதை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லலாம். நாம் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டுமே தவிர அதைக் கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.

Related posts