மறக்க முடியாத மாமனிதர் மாதகல் தந்த தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்

தம்பிப்பிள்ளை ஐயா அல்லது ஆமிக்கார ஐயா என்று டென்மார்க்கில் வீபோ நகரப்பகுதியில் அன்பாக அழைக்கப்பட்ட நமது அன்பிற்குரிய தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் இன்று அமரர் நிலைக்கு சென்றுவிட்டார்.

இன்றுள்ள இளையோர் அவர் வாழ்வில் கற்றுக் கொள்ள ஏராளம் விடயங்கள் உண்டு. அவரை டென்மார்க்கில் சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் சந்தித்தேன். அப்போது வில்பியா என்ற நகரத்தில் அவர் வாழ்ந்து வந்தார். அன்றாடம் கேர்னிங் நகரத்தில் இருக்கும் அகதிகள் கழகத்திற்கு கால் ஓட்டமாகவே வந்துவிடுவார். அது சாதாரண தூரமல்ல 14 கி.மீட்டர் தொலைவு, அந்தத் தூரம் அவருக்கு ஒரு தூசு ஏனென்றால் அவர் ஒரு மரதனோட்ட வீரர்.

வந்துவிட்டால் போதும்; தனது வாழ்வின் பக்கங்களை கூற ஆரம்பிப்பார் பல மணி நேரம் கூறுவர், கேட்டபடியே இருப்பேன். கையில் றூபுறொல் என்று கூறப்படும் பாணை கட்டி வந்திருப்பார், மதியம் வரை உரையாடல் தொடரும், பின் அதே ஓட்டம் பேருந்து பின்னால் போகும்.

பொதுவாக ஒருவர் இலங்கை ஆர்மியில் இருந்தவர் என்றால் அவருடன் பழகவே அச்சமாக இருக்கும், ஆனால் ஓர் ஆர்மிக்குள்ளும் மனிதன் மறைந்திருப்பான் என்பதை அவரில் கண்டு ஆச்சரியப்பட்டேன். இராணுவச் சீருடை அரசியலை தூக்கி வீசிய மனித நேயமிக்க சீரிய மனிதர் அவர்.

அதன் பின் டென்மார்க்கில் நம்மால் நடத்தப்பட்ட அத்தனை கலை விழாக்களிலும் அவர் ஒரு ரசிகராக காட்சி தந்தார். வருடத்தில் 24 கலை விழாக்களை நடத்திய மிகப் பெரும் கலை நடைப் பயணத்தில் பங்கேற்ற டென்மார்க்கின் கலைப் போராளிகளில் அவர் முக்கியமான ஒருவர்.

அதன் பின்னர் அவருடைய பாரியார் திருமதி செல்லம்மா தம்பிப்பிள்ளை அவர்களின் டென்மார்க் வருகையுடன் வீபோ நகரம் மாறுகிறார். அங்கும் எனது பயணம் தமிழ் கற்பிக்க தொடர்கிறது. கலை, தமிழ், அறிவு, விளையாட்டு என்று ஒரு மாபெரும் தலை முறையை அன்று உருவாக்கினோம். அதில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து ஆதரவு தந்த தமிழ் உணர்வாளர். இன்று டென்மார்க்கில் கொடி கட்டிப் பறக்கும் சாதனை இளையோர் வாழ்வில் எல்லாம் அவர் நிழல் இருக்கிறது.

அக்காலத்தே நமது பாடசாலைகளில் நவராத்திரி விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், அப்போது அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அதைவிட முக்கியம் டென்மார்க்கில் நடைபெறும் மரதன் ஓட்ப் போட்டிகளில் ஓர் ஈழத் தமிழர் வெற்றி பெற்ற புகைப்படங்கள் அடிக்கடி டேனிஸ் பத்திரிகைகளில் வரும், அங்கெல்லாம் அவர் புகைப்படங்களே அலங்கரிக்கும்.

தன்னுடைய சிறந்த வாழ்வில் ஒரு வெற்றி பெற்ற குடும்பத் தலைவனாக, கணவனாக, நண்பனாக, சக தமிழர் வாழ்வில் அக்கறை கொண்ட மனித நேயராக, சிறந்த நேர்மையான சமுதாய சேவையாளராக, ஆலயங்களில் அருள் மிகு தொண்டராக, சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் பங்கேற்று, தளர்வுற்ற மனிதர்களை எல்லாம் வாழ்த்தி உற்சாகப்படுத்தி, புலம் பெயர் வாழ்விற்கு புதிய நம்பிக்கை தந்தவர். மது, புகைத்தல், மாமிசம், பொய், கழுத்தறுப்பு என்று அனைத்தையும் நிராகரித்த வீரமிகு தமிழ் அழகு மிகு ஆமிக்காரர்.

அன்றொரு நாள் புகைப்படம் ஒன்றை பரிசாகத் தந்தார். ஆச்சரியத்துடன் பார்த்தேன் இராமனும் அனுமனும் கட்டித் தழுவியபடி நிற்பது. இதை ஏன் தெரிவு செய்தீர்கள் என்று கேட்டேன். இது நட்பின் அடையாளம், நானும் உன் மீது அனுமனின் அன்பு போல அன்பு கொண்டவன் என்று அவர் கூறிய போது, என்னிடம் அதற்கு மேல் பேச வார்த்தைகள் இருக்கவில்லை. அந்த நம்பிக்கை நட்பு விளக்கை எந்தச் சூறாவளியிலும் அணைய விடாது கடைசிவரை காத்தேன் என்பதே எனக்கு பெருமை.

எனது குடும்பத்தில் எல்லா நிகழ்வுகளிலும் தலை மகனாக அவரே நிற்பார், அவர் இல்லாமல் எதுவும் நடந்ததில்லை. இன்று அவர் இல்லை ஆனாலும் அழியாத கோலங்களாக நினைவுகளை வரைந்து போயுள்ளார். என்றுமே தன் பாதை மாறாத நேர்மை மிகு புனித நதி அவர். வீரர்கள் சாவதில்லை அவர்கள் புகழ் உடம்பாக வாழ்கிறார்கள்.

தவறான வாழ்க்கை முறைகளையும் எண்ணங்களையும் துணிந்து தூக்கி வீசி, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டியவர். வீபோவில் காலை நேரம் வீடு வீடாக பேப்பர் போட்டபடி போகும் அவருடைய உறுதி மிகு உழைப்பின் சின்னமான மிதிவண்டி, இன்று ஓய்ந்துவிட்டது. ஆனால் ஓயவிடாது அவர் நினைவுகள் சுழன்று கொண்டிருக்கின்றன.

இலங்கை போனால் தவறாது மாதகல் சென்று அவர் வாழ்ந்த இடத்தை பார்த்து வருவேன். அதன் இன்றைய மாற்றங்களை அறிவதில் அவருக்கு அத்தனை ஆர்வம், அங்குள்ள காளி கோயில் கட்டிடத்தை அமைத்தது, மடம் கட்டியது போன்ற பணிகளை எல்லாம் சொல்வது அவருக்கு என்றுமே இன்பம்.

வீபோவில் படிப்பித்து களைத்து, மதியம் அவர் வீடு போனால் மரக்கறி சாப்பாடு சமைத்து, அப்பளம் பெரித்து, ரசத்துடன் சமையல் இருக்கும். விருந்தோம்பும் பண்பு குலையாத மனிதர். முன்னர் வாரம் தோறும் பார்ப்பேன், வீபோவில் தமிழ் கல்வி நின்றதும், அந்த வாராந்த சந்திப்பு இல்லாது போனது. ஆனாலும் மனதில் என்றும் நிற்கிறார்.

தம்பிள்ளை ஐயா என்பது அவருக்கு நான் வைத்த பெயர்.

உலகில் ஜாக்பாட் லாட்டரி சீட்டு விழவதை விட பெரிய அதிர்ஸ்டம் ஒரு நல்ல நண்பன் கிடைப்பதுதான் என்பார்கள். ராமனுடைய வெற்றிக்கு அனுமனின் நிலை மாறாத நட்பே காரணம். அது போல என் வாழ்வில் என்றும் எதற்காகவும் நிலை மாறாத ஒரு நல்ல நண்பராக இறுதிவரை இருந்தவர் மாதகல் தந்த மாபெரும் மனிதன் தம்பிப்பிள்ளை ஐயா..

இந்த மடலில் அவருக்கு நான் எந்த பட்டத்தையுமே சூடவில்லை, ஏனென்றால் நல்ல நட்பிற்கு மேல் இந்த உலகில் பட்டங்கள் எதுவுமே கிடையாது என்பதே உண்மை. நண்பரே உமக்கு புகழ் அஞ்சலி..

மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு வீபோ வைத்தியசாலையில் கடைசி பயணத்திற்காக நினைவிழந்து கிடந்த வேளை கடைசியாக வந்து பேசினேன் கைகளை அசைத்தீர் கடைசி விடை என்று கூறினீர், அறிந்தேன். இரண்டு நாளில் புறப்படுகிறேன் என்ற செய்தியை கனவில் வந்து சொல்லி விடை பெற்றாய்..

பசியால் கண்கள் மறைந்து விழுந்த புலவனின் மடியில் சோளகக் காற்று வந்து கனிந்த கதலிப் பழங்களை மடியில் கொட்டியது போல காலத்தால் மறவாத ஈழத்தின் கதலிப் பழமாக இருந்தவரே..

ஓடையிலே என் சாம்பர் கலக்கும் போதும்
ஓண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்.
பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்..

என்றவரே உமக்காக எழுதப்படும் பைந்தமிழ் வரிகள் இவை..
ஆண்டவனே நீ எங்கிருந்தாலும் இந்த அன்பு மலரை ஏற்றுக் கொள்…
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

கி.செ.துரை
03.03.2024

Related posts