மனித மனங்களின் ஆழத்தை நுணுக்கமாக அணுகும் படைப்பு

ஆஸ்கர் 2024-க்கான பரிந்துரைப் பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடம்பிடித்திருக்கும் படம் ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’ (The Holdovers). அலெக்ஸாண்ட பெய்ன் இயக்கத்தில் பால் கியாமாட்டி, டோமினிக் செஸ்ஸா நடித்துள்ள இப்படம், மூன்று வெவ்வேறு குணாதிசயங்களையும், வெவ்வேறு பின்னணிகளையும் கொண்ட மனிதர்கள் சந்தர்ப்பவசத்தால் சேரும்போது அவர்களுக்கு இடையிலான உணர்வுப் போராட்டத்தை பேசுகிறது.

கதை 1970-களில் தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள தனவந்தர்களின் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பார்ட்டன் போர்டிங் பள்ளி. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மாணவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகும் வேளையில், போவதற்கு இடமில்லாத சில மாணவர்கள் மட்டும் ஹாஸ்டலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அந்த மாணவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான பால் ஹன்ஹம் (பால் கியாமாட்டி) வசம் ஒப்படைப்படுகிறது. குடும்பம் என்று எதுவும் இல்லாத பால், மனிதர்கள் மீது ஒருவித ஒவ்வாமை கொண்டவர். வகுப்பிலேயே கூட எந்தவித தயவும் பார்க்காமல் மாணவர்களை தண்டிக்கக் கூடியவர். பள்ளி தலைமை ஆசிரியரின் வற்புறுத்தலையும் மீறி ஒரு பணக்கார மாணவனை ஃபெயில் ஆக்கியதற்காக கிடைத்த தண்டனையாகவே அவருக்கு இந்த மாணவர்களை கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

அந்த பணக்கார மாணவனின் தந்தை வந்து ஹாஸ்டலில் இருந்த மற்ற மாணவர்களையும் தன்னோடு அழைத்துச் செல்ல, ஆங்கஸ் டல்லி (டோமினி செஸ்ஸா) என்ற சேட்டைக்கார மாணவன் மற்றும் பள்ளியின் தலைமை சமையல் பெண்மணியான மேரி (டாவின் ஜாய் ராண்டால்ஃப்) ஆகியோருடன் இந்த விடுமுறையை ஹாஸ்டலில் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் பால்.

வியட்நாம் போரில் மகனை பறிகொடுத்த துக்கத்தில் இருக்கும் மேரி, தன்னை கைவிட்ட பெற்றோரை நினைத்து கோபத்தில் இருக்கும் ஆங்கஸ், மாணவர்கள், சக ஆசிரியர்களால் வெறுக்கப்படும் பால். வாழ்வின் மீது பிடிப்பு இல்லாத இந்த மூவருக்கும் இடையே நிகழும் மாற்றங்களை உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் பேசுகிறது ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’.

70களில் நடக்கும் கதை என்பதால் படத்தின் டைட்டில் கார்டு முதல் (தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உட்பட) அனைத்தும் 70களில் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கலர் டோன், ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள், வசன உச்சரிப்பு, பின்னணி இசை என அனைத்தும் வின்டேஜ் பாணி. கிட்டத்தட்ட 70களில் தொடக்கத்தில் வெளியான ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டுவிடுகிறது.

படம் முழுக்க வசனங்களால் நகர்ந்தாலும் எந்த இடத்திலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் படத்தின் மைய கதாபாத்திரங்களை எழுதிய விதம்தான். ஒரு சேட்டைக்கார மாணவன், அவனை நல்வழிப்படுத்தும் ஒரு பக்குவமான ஆசிரியர் என்ற ‘குட் வில் ஹன்ட்டிங்’, ‘டெட் போயட் சொசைட்டி’ பாணி கதைக்களம்தான் என்றாலும், ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’ தனக்கென ஒரு தனித்துவத்தை தொடக்கம் முதல் இறுதி வரை கொண்டிருக்கிறது. படம் ஓடக்கூடிய 133 நிமிடங்களும் நம் முகத்தில் ஒருவித மெல்லிய புன்னைகை இருந்து கொண்டே இருக்கும் வகையில் படம் நெடுக நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு.

படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டிய நடிப்பு பால் கியாமாட்டி உடையது. கோபத்தில் மாணவர்களை திட்டும்போது கூட ஆங்கில சொற்றடர்களை (Phrase) பயன்படுத்தி திட்டுவது, மனிதகுலம் குறித்தும் சமூகம் குறித்தும் தன்னுடைய எள்ளலை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது, பிடிவாத குணத்திலிருந்து மெல்ல மெல்ல அவரிடம் ஏற்படும் மாற்றங்கள், க்ளைமாக்ஸில் எடுக்கும் நெகிழ்ச்சியான முடிவு என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் மிளிர்கிறார்.

அதேபோல ஆங்கஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோமினிக் செஸ்ஸாவும் தனக்கு பிடிக்காத ஆசிரியர் மீது வெறுப்பை உமிழ்வது, பின்னர் அதே ஆசிரியர் மீது அன்புகாட்டுவது என மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எதிரும் புதிருமான இருக்கும் ஆங்கஸ் – பால் இடையே ஒரு உணர்வுப் பாலமாக இருக்கும் மேரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாவின் ஹாய் ராண்டால்ஃபின் நடிப்பு அட்டகாசம்.

இக்கட்டான சூழல்களில் மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்களை மிகச் சிறந்த முறையில் அலசுகிறது இப்படம். குறிப்பாக, ஆங்கஸை பாஸ்டன் நகருக்கு பால் அழைத்துச் செல்லும் காட்சியை ஓர் உதாரணமாக சொல்லலாம்.

இறுதியில் மாணவனின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக பால் கதாபாத்திரம் எடுக்கும் முடிவு பார்க்கும் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறது. படத்தின் தொடக்கத்தில் தனக்கு கிறிஸ்துமஸ் இனிப்பு கொடுக்கும் ஒருவரின் முகத்தில் அறையும்படி கதவை மூடும் அந்த கதாபாத்திரத்தின் மீது இறுதியில் நமக்கு ஏற்படும் மரியாதையும், அன்புமே இந்தப் படத்தின் வெற்றி.
மனித மனங்களின் ஆழத்தை மிக நுணுக்கமாக அலசும் ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’ சந்தேகமேயின்றி ஹாலிவுட்டின் மிகச் சிறந்த ’பீல்குட்’ படங்களின் பட்டியலில் ஒன்றாக இணைகிறது.

Related posts