மறைக்கப்பட்ட சந்திப்பு

அமெரிக்காவின் யு .எஸ் .எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

இதுதொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு.

1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

யு.எஸ்.எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், தேசிய பாதுகாப்பு சபையில் அவரது ஆலோசகராக பணியாற்றியவர்.

மனித உரிமை விவகாரங்களில் அக்கறையும் இறுக்கமான போக்கையும் கொண்டவர். ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகவும், சமந்தா பவர் பணியாற்றியிருந்தார்.

ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரை யு.எஸ்.எய்ட் நிர்வாகியாக நியமித்திருக்கிறார்.

இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்குப் பின்னால், முக்கிய பங்காற்றியவர் இவர்.

பல முறை இலங்கைக்கும் வந்து சென்றிருக்கிறார். மக்கள் போராட்டங்களினால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், கடந்த செம்டெம்பர் நடுப்பகுதியில் சமந்தா பவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்த இலங்கைக்கு அவர் வருவதற்கு முன்னரே 60 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டத்தை அறிவித்திருந்தார்.

இலங்கைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பேச்சுக்களை நடத்திய பின்னர்- அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் அவர் முன் வந்தார்.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது.

அவ்வாறான நோக்கத்தை அடைவதற்கான ஒரு கருவியாக, சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட அவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். இவ்வாறான ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், அதுகுறித்து அவரது அலுவலகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து, இதுவரையில் அந்த உரையாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு நாளும் பலருடன் பேசுவார், தொடர்பு கொள்வார். எல்லா உரையாடல்களும் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுவதில்லை. சமந்தா பவருடனான உரையாடலும் அவ்வாறு உதறித் தள்ளக் கூடிய ஒன்றா?

நிச்சயமாக இல்லை. சமந்தா பவர் உலகின் மிக வலிமையான நாட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்துபவர்.

இலங்கைத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவர் தொடர்புகளை பேணி வருபவர். அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்து ஒதுக்க முடியாது.

ஆனால், ஜனாதிபதி செயலகம் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதற்குக் காரணம், இல்லாமல் இல்லை.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவிடம், சுக நலம் விசாரிப்பதற்காக சமந்தா பவர் அந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை போன்றவற்றின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான், இந்த மெய் நிகர் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு உவப்பானவை. அதனால்தான் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெற்றதாகவே ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

யு.எஸ்.எய்ட் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று (13) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், நிர்வாகி சமந்தா பவர் உரையாடினார்.

அவர்கள் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடினர். மேலும் கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு யு.எஸ்.எய்ட் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சமந்தா பவர் வெளிப்படுத்தினார்.

சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் சட்டமியற்றும் செயல்முறை குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு போன்றவற்றில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.” என்று கூறப்பட்டிருந்தது.

மேன்போக்காக பார்த்தால், இந்த அறிக்கையில் பெரிதாக எந்த விடயமும் இருப்பதாக கண்டறிய முடியாது.

ஆனால் இது முக்கியமானது. இதற்குள் இரண்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

ஒன்று – வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்ற, நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கரிசனை.

இன்னொன்று – ஜனநாயக ஆட்சி முறை மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பான அமெரிக்காவின் கவலை.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்னரே, அதிலுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதுவரும் பகிரங்கமாக பதிவுகளை இட்டிருந்தார். அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போதும், கூறியிருந்தார்.

ஆனாலும் அரசாங்கம் அந்தச் சட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது.

பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இது, கருத்து சுதந்திரத்தை பாதிக்க கூடிய விடயங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், வளர்ந்து வரும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.

அப்போது, அரசாங்கம் அது பற்றி கண்டு கொள்ளவில்லை.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால், பெரும்பாலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களின் முதலீடுகளை தவிர்க்கின்ற நிலை உருவாகும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.

சமந்தா பவரும் கூட இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டு இருக்கிறார். அறிக்கையில் இந்த விடயம் மிக நாசூக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதுதான் இராஜதந்திர அணுகுமுறை.

இறுக்கமான விடயங்களை கூட, இராஜதந்திர மொழிநடையில், இலகுவானதாக, நாசுக்காக எடுத்துக் கூறலாம். அதனை சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

சமந்தா பவரின் பணியகம் வெளியிட்ட அறிக்கையும் அவ்வாறான ஒன்று தான். உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

அவ்வாறான ஒரு பொருளாதார முதலீட்டு வாய்ப்பை இலங்கை இழக்கின்ற நிலைக்கு இந்த சட்டம் காரணமாகப் போகிறது. என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை.

அடுத்து, இந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய முறையையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக உயர்நீதிமன்றத்தினால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கையாளப்பட வேண்டிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பலவும், இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை.

இது ஒரு சட்டத்தை உருவாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு ஆலோசனை கூறுகின்ற உயர்நீதிமன்றத்தின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இதனை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையில் குழப்பத்தை உருவாக்கும்- தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு கையாண்ட வழிமுறை போல, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பதற்கும் இவ்வாறான ஒரு உத்தியை கையாளுகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான், ஜனநாயக ஆட்சி முறை தொடர்பாகவும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டிய சூழல் சமந்தா பவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறார் என்றும், அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற முயற்சியில் இறங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலைப் போன்று. ஜனாதிபதி தேர்தலையும் தடுப்பதற்கு அவர் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

என்னதான், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பாளராக இருந்தாலும், குறுக்கு வழியில் அவர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, பதவியில் நீடித்திருப்பதை அமெரிக்கா விரும்பாது.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றை அமெரிக்கா வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றின் சமநிலையில் ஏற்படும் தாக்கம் – இலங்கையினதும், பிராந்தியத்தினதும் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்காகத் தான்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த வேலையே அனுபவசாலியான சமந்தா பவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக அரச தரப்பு காட்டுகின்ற மௌனம், கொடுக்கப்பட்ட அந்த வேலையை சமந்தா பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதைத் தான் உணர்த்துகிறது.

Related posts