வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வெற்றி துரைசாமி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், அவரது உடல் நேற்று (பிப்.12) மீட்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts