திரை விமர்சனம்: லவ்வர்

அருணும் (மணிகண்டன்) திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) காதலர்கள். திவ்யா வேலையில் இருக்கிறாள். அருண், சொந்தத் தொழில் தொடங்கும் கனவில் குடி, புகை எனப் பொறுப்பில்லாமல் இருக்கிறான். அவன் இயலாமையும் குடும்பச் சூழலும்அவனை முன்கோபியாக வைத்திருக்கின்றன. திவ்யா மீதான அவனது மிகையுரிமையால் (பொசசிவ்நெஸ்) அவளது சுதந்திரத்தை மதிக்க மறுக்கிறான். அமைதியான குணம் கொண்ட திவ்யா, அருணுடன் வாழ்வு முழுவதும் பயணிக்க முடியாது என உணர்ந்து, பிரியும் முடிவை எடுக்கிறாள். அது சாத்தியமானதா, அருண், அவள் முடிவை மதித்தானா, மிதித்தானா என்பது கதை.
ஆண் – பெண் சமத்துவம், பெண் பெரிதும் விரும்பும் பொருளாதாரப் பாதுகாப்பு, சுதந்திரம், திருமணமின்றி இணைந்து வாழ்தல், சமூக ஊடகங்களில் திளைத்திருத்தல் உட்பட, புத்தாயிரத்தின் காதலுக்குப் பல புதிய குணங்கள் உண்டு. நாயகன் புத்தாயிரத் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தபோதும், அவனது ‘சமூக நிலை’யும், திறமை இருந்தும் சட்டென முடிவெடுக்க முடியாதவனாகத் தேங்கி நிற்பதும், அகச் சிக்கலாக மாறி அவனது காதலில், அன்றாடங்களின் பிரச்சினைகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. இதை இயக்குநர் பிரபுராம் வியாஸ் காட்சிகளாக்கி இருக்கும் விதம் முதல் பாதிவரை ரசிக்க வைக்கிறது.
உரிய சுதந்திரத்தை இணைக்குக் கொடுப்பதில் இருக்கும் ஆண் மைய மனோபாவம், தனது இயலாமையால் உணரும் பாதுகாப்பின்மை, அது தூண்டிவிடும் சந்தேகப் பொறி என வளரும் நாயகனின் அகச் சிக்கலின் பின்னால், அவனுடைய குடும்பச் சூழ்நிலையையும் பொருத்தி, அருணின் கதாபாத்திரத்தை எழுதிய விதமும் அதற்குமணிகண்டன் தந்திருக்கும் அபாரமான நடிப்பும் சிறப்பு.
மற்றொரு பெண்ணை நாடிய பொருத்தமற்ற இணையுடன் தனது கசப்பானவாழ்வை, மகனைக் கடைத்தேற்றுவதற்காகக் கடத்தும் கலா என்கிற அபலைப் பெண்ணாக வருகிறார் கீதா கைலாசம். தன்மகனைச் சகித்துக்கொள்கிற ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட நினைக்கிற கலாவின் தாய்மையில் இருப்பது சுயநலம் என்றாலும் அதை ஏற்று, அருண் மாறிவிடுவான் என்று அவன் கொண்டுவரும் சிக்கல்களைப் பொறுத்துக்கொண்டு அவனுக்கு அவகாசம் தரும் திவ்யாவாக வருகிறார் ஸ்ரீகவுரி பிரியா. திரைக்கதையின் முக்கிய இயங்கு புள்ளிகளான இவர்கள் நடிப்பில் ஜொலிக்கிறார்கள்.
டீம் லீடர் கண்ணா ரவி, தோழிகள் நிகிலா சங்கர், அருணின் நண்பர் அருணாச்சலேஸ்வரன் என துணை கதாபாத்திரங்களும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஆண் – பெண் சுதந்திரத்தின் அடையாளச் செயல்களில் ஒன்றுபோல் மது – புகைப் பழக்கத்தைக் காட்சிக்கு காட்சி சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேநேரம் ‘கஞ்சா’ போன்ற போதைப் பொருளைப் புத்தாயிரத் தலைமுறை நாடுவதுபோல அமைக்கப்பட்ட காட்சி திணிப்பாக இருக்கிறது.
பின்னணி இசையில் ஈர்க்கிறார், ஷான் ரோல்டன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் கதையில் வரும் பயணங்கள் காதலின் அண்மையை உணர்த்துகின்றன. ‘காதல் – வாழ்வின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்வது. முடக்குவது அல்ல’ என்பதை உளவியல் சித்திரமாக அளித்திருக்கிறார் இயக்குநர்.
திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகள் இரண்டாம் பாதியில் தடைபடும் கதையோட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருந்தால் சிறந்த காதல் படமாக அமைந்திருக்கும்.

Related posts