சுய விளம்பரத்துக்காக இறப்பு நாடகம்

இறந்ததாக கூறி மீண்டும் உயிருடன் வந்த நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகை பூனம் பாண்டே மீது விமர்சனங்கள் வலுத்ததுள்ளன.

பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் உறுதி செய்திருந்தார். இதனால் அனைத்து மீடியாவும் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டது. கங்கனா ரனாவத், அனுபம் கெர் உட்பட பல நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் அவர் மறைந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் உயிருடன் இருப்பதாக, அவர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில், “எனது இறப்புச் செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக வருந்துகிறேன். எனது நோக்கம், நாம் அதிகம் பேசப்படாத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பேச வைப்பதுதான்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது மோசமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல நல்ல வழிகள் இருக்கும்போது, இந்த மலிவான விளம்பரம் அருவருப்பானதாகவும் அவமானகரமாக இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர். இது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் மோசடி. யாராவது புகார் செய்தால் சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியதுதான் என்று தெரிவித்துள்ள சிலர், இதனால் இறந்ததாக பப்ளிசிட்டி செய்திருப்பது அந்த நோய் குறித்து தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் விமர்சித்துள்ளனர்.’

இதனிடையே, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் எக்ஸ் பக்கத்தில், “பூனம் பாண்டேவின் செயல் முற்றிலும் தவறானது. புற்றுநோயை பயன்படுத்தி அவர் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படியான செயல்களுக்கு பிறகு திரைத்துறையில் எதாவது உண்மையான மரணங்கள் நடந்தால்கூட மக்கள் நம்ப மாட்டார்கள். மற்ற நடிகர்கள் யாரும் தங்கள் சுயவிளம்பரத்துக்காக இந்த அளவுக்கு கீழ்த்தரமாக சென்றது கிடையாது. எனவே நடிகை பூனம் பாண்டே மீதும், அவரது மரணத்தை உறுதிசெய்த அவரின் மேலாளர்மீதும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று நடிகை பூனம் பாண்டே மீது போலீஸார் நடவடிக்கை மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர் சத்யஜித் தாம்பேயு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கர்ப்பப்பை புற்றுநோயால் நடிகை இறந்ததாக சொல்லப்பட்ட செய்தி, நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கான ஒரு வழியாக இருக்க முடியாது.

இந்தச் சம்பவம் விழிப்புணர்வாக இல்லாமல், கர்ப்பப்பை புற்றுநோயின் தீவிரத் தன்மையை நீக்கி, கவனத்தை முழுவதுமாக நடிகையின் பக்கம் திருப்புவதாக இருக்கிறது. எனவே தவறான தகவலை வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தாம்பே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Related posts