விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில்

விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “நானும் விஜயகாந்த்தும் வாகை சந்திரசேகரம் ஒரு படப்பிடிப்பில் தான் சந்தித்தோம்.

ஒருமுறை நான் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஓடி வந்து கொண்டிருந்தார் விஜி. அப்போது என்னிடம் எனக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று தனக்கு வாய்ப்பு இல்லாததை கூட வெளிப்படையாக கூறிய ஒரு மனிதன்தான் விஜயகாந்த்.

இவ்வளவு சீக்கிரம் சென்று விடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் விஜயகாந்துக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் கடைசி வரைக்கும் நின்றவர். யாராலும் அப்படி நிற்க முடியாது. நானும் சரத்குமார் உள்ளிட்டோரும் நடிகர் சங்கத்துக்காக உழைத்தாலும் கூட அதற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியான நபராக விஜயகாந்த் இருந்தார்.

உழவன் மகன் படத்தில் நடித்தபோது எனக்கு கால் உடைந்து விட்டது. ஆனாலும் விஜயகாந்த்துடன் இறுதிக்காட்சியில் சண்டை போட வேண்டும். நின்றபடியே சண்டைபோட்டு அந்த காட்சியை படமாக்கி முடித்து விட்டோம். ஆனால் இப்ராஹிம் ராவுத்தர் எனக்கு சம்பளம் கொடுக்கும்போது குறைத்து பேசினார்.

ஆனால் அவரை கடிந்து கொண்ட விஜயகாந்த் உடைந்த காலுடன் இன்று நடித்துக் கொடுத்திருக்கிறான், அவன் கேட்பதை குறைக்காமல் கொடு என்று கூறினார். அந்த அளவுக்கு தாயுள்ளம் கொண்டவர் விஜயகாந்த். அவருக்கு குடும்பம் கூட இரண்டாம் பட்சம் தான். இந்த கலை உலகச் சேர்ந்தவர்கள் தான் முதலில். அவர்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டார். இனி விஜயகாந்த் கிடைப்பாரா என்றால் தெரியவில்லை. ஆனால் நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியும்” என்றார்.

இதையடுத்து நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “எல்லோரும் இறந்த பிறகு கடவுளாகி விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில பேர் தான் வாழும்போதே கடவுளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். நிறைய அனுபவங்கள் அவருடன் எனக்கு இருந்தாலும் அதை நான் எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். பகிர்ந்து கொள்ளக் கூட எனக்கு தோணவில்லை. ஆனால் அவர் நம்முடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நமக்காக எவ்வளவோ விட்டு விட்டு சென்றிருக்கிறார். அவரைப்பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை. ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அல்ல. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், மக்கள் அவரை எப்படி தங்கள் மனதில் வைத்துக் கொள்வார்கள் என்று சொல்லும் ஒரு சிறு செய்தியாக இடம் பெற்றாலே போதும். அவர் தனது படத்தில் சொன்னது போல சத்ரியனுக்கு சாவு இல்லை என்று தான் நானும் சொல்கிறேன்” என்று பேசினார்.

Related posts