டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபுத்திங்கள் விழா

டொரன்டோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ, கனடியத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை நிறுவனம் இணைந்து 2024 ஜனவரி 10 அன்று தமிழ் மரபுத்திங்கள் விழாவை நடத்தின. இந்த நிகழ்வு டொரன்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ ஹைலேண்ட் மண்டபத்தில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றப்பட்டு விழா ஆரம்பமானதுடன், செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் பலவும் இதன்போது இடம்பெற்றன. பொங்கல் உட்பட தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளும் இந்த நிகழ்வில் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் கலாசாரத்தை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தனது அர்ப்பணிப்பிற்காக அறியப்படும் புகழ்பெற்ற கனடா மானுடவியலாளரான டொக்டர் பிரெண்டா பெக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சங்க இலக்கியத்தில் ‘வெள்ளைக் குடை’யின் முக்கியத்துவத்தையும், அது ஒற்றுமையின் அடையாளமாக ஆதி தமிழர் மரபில் பார்க்கப்பட்டது தொடர்பாகவும் உரையாற்றிய அவர், தனது கருத்தை விளக்குவதற்கு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வெள்ளைக் குடையை வந்திருந்தவர்களுக்கு காட்சிப்படுத்தியதோடு, இந்த தனித்துவமான கலாசார கலைப்பொருளைக் குறிப்பிடும் சங்க இலக்கியப்பாடலையும் படித்துக்காட்டினார்.

இவர் மட்டும் அல்லாது டொரன்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை திட்டத்தின் தலைவரும் கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் தலைவருமான சிவன் இளங்கோ, கனடியத் தமிழர் பேரவையின் தற்போதைய தலைவி திருமதி ரவீனா ராஜசிங்கம், பேராசிரியர் லிண்டா ஜோன்சன் (டொரன்டோ ஸ்காபரோ பல்கலைக்கழகத்தின் தற்காலிக அதிபர்) மற்றும் செலஸ்டே. ரிச்சர்ட்ஸ் (இயக்குநர் மேம்பாடு மற்றும் பழைய மாணவர் உறவுகள்) ஆகியோரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு அவர்களால் நேரில் வர முடியாவிட்டாலும், அவர் தனது உரையை மெய்நிகராக வழங்கினார். தமிழ் இருக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியபோது அவரது வார்த்தைகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

டொரன்டோ ஸ்காபரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்கான இருக்கையை நிறுவுதல் என்பது உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களின் ஆதரவுடன் கனடியத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை நிறுவனம் ஆகியவற்றின் வரலாற்று கூட்டு சாதனையாகும். இந்த குறிப்பிடத்தக்க சாதனை தமிழ்மொழியின் கல்வி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் மேலும் உதவும். 2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தமிழ் ஆய்வுத் துறையின் தலைவர் பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொரன்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் இந்த நிகழ்வு சுமார் 200 விருந்தினர்கள் மற்றும் கலைஞர்களுடன் சிறப்பாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை சந்தேகத்திற்கு இடமின்றி வரும் ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தும் என உலகளாவிய தமிழ் சமூகம் எதிர்நோக்குகிறது. இம்முயற்சியானது பல்வேறு சமூகத்தினரிடையே தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய அறிவையும் புரிதலையும் வளர்ப்பதற்கும், அதில் சிறந்து விளங்குவதற்கும் ஒரு கலங்கரை விளக்கமாக அமையும்.

Related posts