ராமின் ‘ஏழு கடல், ஏழு மலை’ கிளிம்ஸ் எப்படி?

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல், ஏழு மலை’ பட கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படம் 53-வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி இருக்கிறது. இந்நிலையில், படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ எப்படி? – ‘ஒருத்தர விட்டு ஒருத்தர் போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கும். ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அது காதல்’ என்ற முதல் வசனமே இது இயக்குநர் ராம் படம் என்பதை உணர்த்திவிடுகிறது. அடுத்து ரயில் ஒன்றில் நிவின் பாலி, அஞ்சலியைப் பார்க்கும் காட்சி அத்தனை அழகாக படமாக்கப்பட்டுள்ளதை வீடியோ உணர்த்துகிறது.

அஞ்சலியின் முகத்திரையை விலக்கி, ‘எல்லோரும் ராணின்னு கையெடுத்து கும்பிட்டாங்க’ என நிவின் பாலி பேசும் வசனமும் அந்தக் காட்சியும் ஈர்க்கிறது. ‘மொத மொத நான் உங்கள பாத்தப்போ நீங்க ஒரு ராணி’ இப்படியான ராமின் வசனங்களும், ஒளிப்பதிவில் மின்னும் காட்சிகளும், யுவுனின் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உணர்த்துகிறது.

ஆனால் என்ன… ரயிலில் சூரி ‘அதெப்படி சார்’ என கேள்வி கேட்க, அதற்கு நீளமான முடி, தாடியுடன் அமர்ந்திருக்கும் நிவின் பாலி, ‘எனக்கு 8,822 வயசு’ என சொல்லும் இடத்தில் ‘கற்றது தமிழ்’ படத்தின் சாயல் குறுக்கே வந்து நிற்கிறது. காரணம், அந்தப் படத்தில் இதே மாதிரியான கெட்டப்புடன் (இது அதன் லைட் வெர்ஷன்) ஜீவா, கருணாஸிடம் கதை சொல்வார். சில சாயல்கள் தெரிந்தாலும், படம் அழுத்தமான காதல் பின்னணியை உள்ளடக்கியிருப்பதை வீடியோ உணர்த்துகிறது.

Related posts