101 ரூபாய் முன்பணம், தயாரிப்பாளரிடம் சவால்..

“கறுப்பா இருந்தா ரஜினின்னு நினைப்பா, உன்ன யார் உள்ள விட்டது” என்று விரட்டினார் ஓர் இயக்குநர். “இவருக்கெல்லாம் ஜோடியா நடிச்சா.. என் மார்க்கெட் காலி” என்று பின்வாங்கினார் வளர்ந்து கொண்டிருந்த ஒரு கதாநாயகி. “பணம் கொண்டா, ஹீரோ சான்ஸ் தர்றேன்” என்றார் ஒரு தயாரிப்பாளர். இப்படி எவ்வளவோ அவமானங்கள், கேலி, கிண்டல்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு உயரங்களைத் தொட்டவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்.
அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணசாமி’. அது அவருடைய தாத்தாவின் பெயர். தனக்குத் தானே ‘விஜய் ராஜ்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே மதுரையில் அவரது நண்பர்கள் மத்தியில் ‘விஜி’ என்று பிரபலமானது. அவரை இப்போதும் ‘நாராயணா..’ என்றழைப்பது அவருடைய அக்கா டாக்டர் விஜயலட்சுமி மட்டும்தான். மதுரை மாகாளிபட்டியில் அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்டார். பகலில் ரைஸ் மில், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, இரவில் சினிமா என்று ஜாலியாக வலம் வந்த இளைஞர். அவரது நண்பர்கள் குழுவுக்கு ‘இரவு ராஜாக்கள்’ என்கிற தனிப் பட்டம் உண்டு.
படத்திலிருந்து நீக்கம்: அப்பாவுக்குப் பிடித்த தலைவர் காமராஜர். மகனுக்கு எம்.ஜி.ஆர். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். மன்ற உறுப்பினரும்கூட. ‘விஜயராஜ் & கோஷ்டி’ மாலை ஆகிவிட்டால், மதுரை சேனாஸ் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் ஒன்றுகூடி அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அது மதுரையின் பெரிய விநியோகஸ்தர் முகம்மது மஸூரின் அலுவலகம். இவர்தான் விஜய்ராஜுக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்று தந்தவர். விஜயகாந்தின் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்பார்கள். அது அவரது 6வது படம். முதல் படம் ‘இனிக்கும் இளமை.’
ஆனால் அதற்கும் முன்பு அவர், ரஜினிக்கு தம்பியாக ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். ‘அட யாருப்பா இந்த ஆள்! நல்லா நடிக்கிறானே..!’ என்று செட்டில் பேச்சுக் கிளம்பியது. மூன்று நாள் மட்டுமே நடித்திருந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்டார். கொதித்த விஜய்ராஜ், நேரே அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்டு சண்டை போட்டார். “உங்கள் முன்னாலேயே சினிமாவில் ஜெயித்துக் காட்டுகிறேன்” என சவால் விட்டுத் திரும்பினார்.
‘அகல் விளக்கு’ அனுபவம்: அதன் பின்னர், தனது புகைப்பட ஆல்பத்துடன் கோடம்பாக்கம் முதல் விருகம்பாக்கம் வரை சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். சென்ற இடமெல்லாம் கிண்டலும் கேலியும்தான். ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை. மீண்டும் கை கொடுக்க முன் வந்தார் விநியோகஸ்தர் மஸூர்.
அப்போது எம்.ஏ.காஜா இயக்கிக் கொண்டிருந்த ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜய்ராஜுக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, அந்தப் படத்தில் வில்லன் வேடம் பெற்றுத் தந்தார். திருப்பூர் பனியன் கம்பெனி நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து நடித்தார். விஜயராஜை ‘விஜய்காந்த்’ என்று பெயர் மாறினார் இயக்குநர் எம்.ஏ.காஜா.
கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு அதிகாலையே அழைத்துச் சென்று, விஜய்காந்துக்கு மேக்கப் போட்டு உட்கார வைத்திருந்தார்கள். படத்தின் நாயகி ஷோபா அன்றைக்கு முன்னணிக் கதாநாயகி. “அவர் எப்போ உள்ளே நுழையுறாரோ, அடுத்த நிமிஷமே ஷாட் ரெடியா இருக்கும். அப்போது ‘காம்பினேஷன்’ ஷாட்களை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எடுத்துவிட வேண்டும்.
அவர் நமக்கு 2 மணி நேரம் நடித்துவிட்டு, வேறொரு படத்தின் ஷூட்டிங் போகிறார். நீங்க மேக்கப்போடு ரெடியா இருங்க” என்று விஜயகாந்துக்கு உத்தரவு போட்டு உட்கார வைத்துவிட்டார்கள். காலை நீண்டு மதியம் ஆகியும் ஷோபா வந்தபாடில்லை. விஜயகாந்துக்கோ வயிற்றைக் குடைகிற மாதிரி பசி. எழுந்து சாப்பிடப் போனார்.
“இப்பச் சாப்பிட போகாதீங்க. ஹீரோயின் அந்த ஷூட்டிங்லேர்ந்து கிளம்பி விட்டார். இப்போது வந்து விடுவார் எனத் தடுத்துவிட்டார்கள். பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது. பசி தாங்க முடியாத விஜயகாந்த், கோபமாக எழுந்து போய் உணவைத் தட்டில் வைத்து ஒரு வாய் அள்ளிச் சாப்பிடும்போது வேகமாக ஓடி வந்த புரொடக்சன் மேனேஜர் விஜயகாந்தின் கையைப் பிடித்து எழுப்பினார். “சார் சாப்பாடு எங்கயும் ஓடிராது.. போய் சட்டுன்னு கைகழுவிட்டு ஷாட்டுக்கு வாங்க.. ம்ம்.. சீக்கிரம். ஹீரோயின் வந்தாச்சு.. அவங்க சீனை நடிச்சு முடிச்சுட்டு உடனே கிளம்பிடுவாங்க.. ரீடேக் வாங்க மாட்டாங்க” என்றார்.
“இன்னும் ரெண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வந்துடுறேன். ரொம்பப் பசிக்குது” என்கிறார். அதெல்லாம் ஆகிற கதையில்ல” என்று கையைப் பிடித்து இழுத்து சென்றார். “ஏங்க மனுஷன் கஷ்டப்படுறது.. சம்பாதிக்கிறது எல்லாமே வயிறாரச் சாப்பிடத் தானேங்க?” என்று அழாத குறையாகக் கேட்டார். எதுவும் காதில் விழாத மாதிரி விஜயகாந்தை இழுத்துப்போய் ஷாட்டில் நிறுத்தினார் அந்த மேனேஜர். பசியை மறைத்துக்கொண்டு நடித்தார்.
“சினிமால எதுக்கு இந்தத் தேவையில்லாத அடாவடித்தனம்.. அதுவும் பசி விஷயத்துல” என்று யோசித்த விஜயகாந்த், அப்போது மனதில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். ‘நான் சினிமா கம்பெனி தொடங்கினால் யாரையும் பட்டினியாக வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்’. இன்றைக்கும் ‘விஜயகாந்த் கம்பெனியில் நல்ல சாப்பாடு போடுவார்கள்’ என்று சக நடிகர்களும் சினிமா தொழிலாளர்களும் சொல்லும்படி சாதித்துக் காட்டினார் விஜயகாந்த்.
மனித நேய மனிதர்: அவர் நடித்த முதல் 5 படங்கள் கைகொடுக்கவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரும்பிப் பார்க்க வைத்தது. ஓவர் நைட்டில் 10 படங்களில் ஒப்பந்தமானார். அவற்றில் சில வென்றன. சில தோல்வியின் விரல் பிடித்து நின்றன. அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட்டம். அந்தக் காலகட்டத்தில் விஜயகாந்துடன் 10 பேர் இருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டிய பொறுப்பும் அவருடையது தான்.
இந்தச் சூழ்நிலையில்தான் ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. அப்போது உடன் இருந்த உயிர் நண்பரான இப்ராஹிம் “விஜி.. என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லே.. நீ வில்லனா நடிக்காதே. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று நம்பிக்கை கொடுத்தார். நண்பனின் பேச்சை விஜயகாந்த் மீறவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவரே அதன் பின்னர் விஜயகாந்துக்குத் தாறுமாறான ஏறு முகம்தான்.
‘பெரிய ரஜினின்னு நினைப்பா?’ என்று முகத்தில் புகைப்படங்களை வீசிய இயக்குநர் விஜயகாந்தை வைத்து வெற்றிப் படம் கொடுத்தார். அவருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்கள் தேடி வந்து வாய்ப்பினைக் கேட்டுப் பெற்று நடித்தார்கள். அதிரடி ஆக்ஷன் நாயகனாக ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜயகாந்தை தூக்கி வைத்தனர் ரசிகர்கள். திரையில் மாபெரும் மாஸ் கதாநாயகனாகத் திகழ்ந்த அளவுக்கு அரசியலில் அமைந்த வாய்ப்பு, அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் போனதற்குக் காரணம், அவருக்குச் சரியான ஆலோசகர்கள் இல்லாததே.சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். எம்.ஜி.ஆர். பாணியில் விஜயகாந்துக்கு கதைகள் அமைக்கச் சொல்வார். ரசிகர் மன்றங்களையும் அவ்வாறே உருவாக்கினார்.
தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்குவதுடன் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கக் கூறும் ஓர் அறிக்கையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அவரால் கல்வி உதவி பெற்று பலர் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக, ஏன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள்.
90களில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குக் கதவு திறந்து விட்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் நடித்த படங்களில் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. 100 நாள் படங்களின் பட்டியல் பெரியது. வருமான வரி செலுத்துவதில் அத்துறையிடமிருந்து பாராட்டுப் பெற்றவர் விஜயகாந்த்.‘மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர்’ என்று கருத்து வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவராலும் பாராட்டப்பட்டவர் விஜயகாந்த்.
| நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். அவரது சினிமா வாழ்க்கைப் பயணம் குறித்த கட்டுரை இங்கே மறுபகிர்வாக. |

Related posts