சலார் அதீத வன்முறை, வெற்று பில்டப் ..

கேஜிஎஃப்’ மற்றும் கேஜிஎஃப் 2’ என்ற இரண்டு படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை தென்னிந்திய சினிமாவின் பக்கம் திருப்பி பிரசாந்த் நீலும், ‘பாகுபலி’க்குப் பிறகு அதன் வெற்றியை ஈடுசெய்யமுடியாமல் அடுத்தடுத்த தோல்விகளால் தடுமாறிக் கொண்டிருந்த பிரபாஸும் கைகோர்த்துள்ள ‘சலார்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

கற்பனை நகரமான கன்சாரில் தேவாவும் (பிரபாஸ்), வரதாவும் (பிருத்விராஜ்) சிறுவயது நண்பர்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயிரையே கொடுக்கும் அளவு நெருக்கம். வரதாவின் தந்தையால் தேவாவின் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை வரும்போது நண்பனுக்காக தந்தையையே எதிர்க்கிறார் வரதா.

’நீ எப்போதும் அழைத்தாலும் திரும்பி வருவேன்’ என்ற வாக்குறுதியுடன் கன்சாரை விட்டு தன் தாயுடன் (ஈஸ்வரி ராவ்) தப்பிச் செல்கிறார் தேவா. பல வருடங்களுக்குப் பிறகு தன் தாயின் அஸ்தியை கரைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தன் தந்தைக்கு தெரியாமல் இந்தியாவுக்கு வரும் ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) ஒரு கும்பல் துரத்துகிறது.

அவரிடமிருந்து ஆத்யாவை காப்பாற்றி தனது கண்காணிப்பில் வைத்து பாதுகாக்கிறார் தேவா. ஆனால், தேவாவை எந்த தகராறுக்கும் செல்லவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அவரது தாய்.

தன்னை துரத்தும் கும்பல் யார் என்ற கேள்விக்கான தேடலில் ஆத்யாவுக்கு தேவா – வரதா பற்றிய ஃப்ளாஷ்பேக் தெரியவருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்படாத தனி ராஜ்ஜியமாக திகழ்ந்து வரும் கன்சார் நகரத்தின் அரசர் ராஜமன்னார் (ஜகபதி பாபு) தனது மகனான வரதாவை அடுத்த அரசனாக அறிவிக்க நினைக்கிறார்.

அவரது இந்த முடிவு, கன்சாரின் அமைச்சர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சியை கவிழ்க்கவும், வரதாவை கொல்லவும் உலகம் முழுவதுமிலிருந்து பல்வேறு படைகளை வரவழைக்கின்றனர். ஆனால் வரதா, இத்தனை படைகளையும் எதிர்க்க தனது சிறுவயது நண்பன் தேவாவை அழைக்கிறார்.

அங்கு வரும் தேவா எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து தன் நண்பனை காப்பாற்றினாரா? தேவாவை அவரது தாய் தொடர்ந்து தடுப்பதன் காரணம் என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’

இருள் படிந்த ஊர், கரி படிந்த மனிதர்கள், பகலையே இருட்டாக காட்டும் ஒளிப்பதிவு, பிரதான கதாபாத்திரங்கள் முதல் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டுபவர்கள் வரை பேசும் பில்டப் வசனங்கள், இதெல்லாம் ‘கே.ஜி.எஃப்’ என்ற படத்தின் வழியே இயக்குநர் பிரசாந்த் நீல் திரையில் காட்டியபோது, அது ஆடியன்ஸ் மத்தியில் வெகுவாக ரசிக்கப்பட்டது. அதற்கு காரணம், அப்படத்தில் இருந்து நேர்த்தியான திரைக்கதையும், ராக்கி என்ற கதாபாத்திர வடிவமைப்பும்தான். ஆனால், அதே பில்டப் வசனங்கள், அதே டெய்லர், அதே வாடகை என அனைத்து அம்சங்களும் ’சலார்’ படத்தில் இருந்தும், அவை அனைத்தும் தொடக்கம் முதல் இறுதி ஓவர் டோஸாக இருக்கின்றன.

படம் தொடங்கும்போதே பில்டப் வசனங்களும் தொடங்கி விடுகின்றன. இயக்குநரின் முந்தைய படங்களில் ஹீரோவை பற்றி ஹீரோவை சுற்றி இருப்பவர்கள்தான் பில்டப் கொடுப்பார்கள். ஆனால், இதில் ஹீரோவுக்கு மட்டும் பில்டப் கொடுத்தால் பரவாயில்லை, ஹீரோவின் அம்மா, ஹீரோவின் நண்பன், ஹீரோவின் பக்கத்து வீட்டுக்காரர், ஹீரோவின் கடையில் வேலை செய்பவர், வில்லன், வில்லனின் சொந்தக்காரர்கள் என படத்தில் வரும் ஒவ்வொருவருக்கும் பில்டப் வசனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பிரசாந்த் நீலின் யுனிவர்ஸில் இயல்பான மனிதர்களே கிடையாதா? படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் வீட்டில் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்கும்போது கூட அடித் தொண்டையை செருமியபடி, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு ஒரு பஞ்ச் வசனத்துடன் தான் கேட்பார்கள் போல.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயக்குநரின் முந்தைய படங்களிலும் இருந்தாலும் அவை ஒரு குறையாக துருத்திக் கொண்டு தெரியாத காரணம், ஓரளவு படத்தைத் தாங்கிப் பிடித்த திரைக்கதைதான். ஆனால் ‘சலார்’ படத்தில் அது முற்றிலுமாக இல்லாததால் இந்த வெற்று பில்டப் வசனங்கள் எல்லாம் சுத்தமாக ஒட்டவே இல்லை. ஒரு சிம்பிளான கதையை ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவது போல சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

அத்துடன் படம் முழுக்க அவசியமே இல்லாத கண்மூடித்தனமான அதீத வன்முறை சலிக்க வைக்கிறது. பிரபாஸ் தன் கண்ணில் படும் அனைவரையும் கத்தி, கடப்பாரை, கோடாரி, துப்பாக்கி என சகட்டுமேனிக்கு போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார். போகிறபோக்கில் எங்கே நம்மையும் ஒரு போடு போட்டுவிட்டாரோ என்று கழுத்தில் கைவைத்து உறுதி செய்துகொள்ள வேண்டியிருந்தது. படம் முடியும்போது தோராயமாக ஒரு ஒன்றரை லட்சம் பேரை கொன்றிருப்பார் என்று தோன்றுகிறது. அடுத்த பாகத்தில் இது இன்னும் பல மடங்காக ஆகலாம் என்ற அச்சம் மேலோங்குவதை தடுக்க முடியவில்லை.

படத்தில் பிரபாஸ் பேசும் வசனங்களை ஒரு ஏ4 பேப்பரில் கால் பக்கத்தில் எழுதி விடலாம். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டும், கொலை செய்துகொண்டும் இருப்பதால் நடிக்கவெல்லாம் அவருக்கு வேலையே இல்லை. பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி என கிட்டத்தட்ட படத்தில் நடித்த அனைவரின் நிலையும் இதேதான். பாபி சிம்ஹா பாத்திரம் மட்டும் ஓரளவு வலுவாக எழுதப்பட்டுள்ளது. படத்தில் வைக்கப்பட்டுள்ள எமோஷனல் காட்சிகளும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தில் வரும் கதாபாத்திரங்களை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ளவே சிரமப்படும் அளவுக்கு படத்தில் லட்சக்கணக்கான பேர். யார் யாருக்கு மகன், யார் யாருக்கு எதிரி, நண்பன் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவே முக்கால்வாசி படம் முடிந்து போகிறது.

படத்தின் ஒட்டுமொத்த பலமே தொழில்நுட்ப அம்சங்கள்தான். அதிலும் கலை இயக்கமும், விசுவல் எஃபெக்ஸும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவை. கன்சார் தொடர்பான காட்சிகளிலும், அதன் பின்னணியிலும் படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. புவன் கவுடாவின் கேமரா அதே ‘கேஜிஎஃப்’ பாணி ஒளிப்பதிவை சிறப்பாக செய்திருக்கிறது. ரவி பஸ்ரூரின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் கைகொடுத்திருந்தாலும், தொடர்ந்து ஒரே போன்ற இசை தலைவலியை தருகிறது. அன்பறிவின் ஆக்‌ஷன் காட்சிகள் தரம்.

படத்தின் இரண்டாம் பாதி நீளம் மிகப்பெரிய மைனஸ். முதல் பாதி கூட ஆங்காங்கே சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததால் தப்பித்தது. ஆனால் இரண்டாம் பாதியெல்லாம் இடைவிடாத ஆக்‌ஷன் காட்சிகள் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன. பிரசாந்த் நீல் யுனிவர்ஸில் லாஜிக் எல்லாம் பார்க்க தேவை இல்லை என்றாலும், நாயகன் ஒற்றை ஆளாக தலைவனின் தலையை கொய்யும்போது கூட சுற்றி நிற்கும் அடியாட்கள் எல்லாம் கையில் துப்பாக்கி இருந்தும் தேமேவென்று நின்று கொண்டிருப்பது அப்பட்டமான லாஜிக் மீறல். படத்தின் இடையிலேயே பிரபாஸ் – பிருத்விராஜ் எதிர்காலத்தில் எதிரியாக மாறிவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு கிளைமாக்ஸின் அதற்கான குறிப்பு எதுவுமே வைக்காமல் எந்த தைரியத்தில் இரண்டாம் பாகத்துக்கு ‘லீட்’ கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

பான் இந்தியா படங்கள் நாடு தழுவிய வெற்றி அடையும்போது, அதற்கு அடுத்த படத்தில் அதைவிட பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்கிற அழுத்தம் அப்படங்களின் நாயகர்களுக்கு ஏற்படுகிறது. ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’ என என்னன்னவோ செய்தும் பிரபாஸை விடாமல் துரத்துகிறது இந்த பான் இந்தியா சாபம். அடுத்த படத்திலாவது திரைக்கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஒரு சராசரி மனிதனாக நடித்தால் மீண்டும் பழைய வெற்றிகளை அவரால் சுவைக்க முடியும் என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்தத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்த ‘சலார்’ பார்வையாளர்கள் முகத்தில் கொடுக்கப்பட்ட ‘பளார்’

Related posts