மாதவிடாய் என்பது குறைபாடு அல்ல

மாதவிடாய் என்பது குறைபாடு அல்ல என்பதால் அதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிய கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று (டிச.14) பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் என்பது இயலாமை அல்ல. பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் அதுவும் ஓர் இயற்கையான பகுதி” என்று தெரிவித்தார்.

மாதவிடாய் குறித்த ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இந்த சூழலில், ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா கூறியிருப்பதாவது: “வேலைக்குச் செல்லும் பெண் என்பதே ஒரு கட்டுக்கதை.

மனிதகுல வரலாற்றில் வேலை செய்யாத ஒரு பெண் இதுவரை இருந்ததே கிடையாது. விவசாயம் தொடங்கி வீட்டு வேலைகள் முதல் குழந்தைகளை வளர்ப்பது வரை பெண்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

தங்கள் குடும்பம் அல்லது சமூகம் அல்லது தேசத்திற்கான அவர்களுடைய அர்ப்பணிப்புக்கு எதுவும் தடையாக இருந்ததில்லை. மருத்துவ ரீதியான பிரச்சினைகள் தவிர்த்து, பெண்களின் மாதவிடாய் நாட்களுக்கு ஊதிய விடுமுறைகள் தேவையில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் என்பது நோயோ அல்லது குறைபாடோ அல்ல” இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.

Related posts