ஊடகவியலாளர்களுக்கு மிகவும் குறைந்தளவான சம்பளம்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மிகவும் குறைந்த மட்டத்திலான சம்பளத்தையே ஊடகவியலாளர்கள் பெறுகிறார்கள்.

ஊடகவியலாளர்களுக்கு எவ்விதமான நலன்புரி திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்படுவதில்லை.ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தற்போதைய வாழ்க்கை செலவுக்கு அமைய ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை.

தொழிற்றுறையை முன்னெடுப்பதற்கல்ல,தமது தனிப்பட்ட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட முடியாத அளவுக்கு ஊடகவியலாளர்களின் சம்பளம் குறைந்த மட்டத்தில் உள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு என்று கடந்த காலங்களில் 3 இலட்சம் ரூபா கடன் வசதி,மோட்டார் வாகன கொள்வனவுக்கு இலகு கடன்,இலகு கடன் திட்டத்தில் வீடு,காப்புறுதி திட்டம் என பலதரப்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் ஏதும் சாத்தியமடையவில்லை.ஊடகவியலாளர்கள் இந்த திட்டங்களினால் பயனடையவில்லை.

ஊடகவியலாளர்கள் மாடி வீடுகளை கட்டுவதற்கும்,சொத்து சேர்ப்பதற்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரவில்லை.

கௌரவமான முறையில் தமது தொழிற்றுறையை முன்னெடுப்பதற்கு உரிய சம்பளத்தை வழங்குமாறு கோரிகிறார்கள்.

ஊடகவியலாளர்கள் இல்லையென்றால் தகவல் விநியோகம் ஸ்தம்பிதமடையும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆகவே ஊடகவியலாளர்களின்; நலன் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்து அண்மையில் ஓய்வுப்பெற்ற 50பேருக்கான பணிக்கொடை கொடுப்பனவு இதுவரை கொடுக்கப்படவில்லை.

ஆகவே ஊடக சேவையை பலப்படுத்துவதாக பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் செயலளவில் செயற்படுத்துங்கள்.

அதேபோல் பெறுமதி சேர் வரி விதிப்பு பட்டியலுக்குள் நூல் பதிப்பு உள்ளவாங்கப்பட்டுள்ளது.தெற்காசிய வலயத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறான தன்மை கிடையாது. ஆகவே நூல் பதிப்பினை பெறுமதி சேர்(வெற்) வரியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

Related posts