போருக்கு எதிரான சினிமா!

இயக்குநர் டாக்டர் பிஜு எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் அத்ரிஷிய ஜலகங்கள் (Adrishya jalakangal). மாய யதார்த்த மொழியில் போருக்கு எதிரான முன்னெடுப்பை பேசியுள்ள இப்படம் பார்வையாளர்ளுக்கு எண்ணற்ற கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களை அவர்களது முடிவுக்கே விட்டுவிடுகிறது. ஆயுதங்களுக்குப் பதிலாக ராணுவ வீரர்களின் கையில் ஒரு புத்தகமோ, இசைக் கருவியோ இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை காட்சியியல் படிமங்களாக வர்ணித்துள்ளது இந்த ‘அத்ரிஷிய ஜலகங்கள்’ திரைப்படம்.

மனநலக் குறைபாடுள்ள டொவினோ தாமஸ் காவல் துறையால் பிடித்துச் செல்லப்பட்டு மனநல மருத்துவமனையில் அடைக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார். அங்கிருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும், கைவிடப்பட்ட ரயில் பெட்டியில் அமைந்துள்ள தனது வசிப்பிடத்துக்கு வந்து சேர்கிறார் டொவினோ. இந்த இடைப்பட்ட காலத்தில், டொவினோவின் இருப்பிடத்துக்கு எதிரேயுள்ள மற்றொரு ரயில் பெட்டியில் நிமிஷா சஜயன் குடியேறியிருக்கிறார்.

ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு துருவேறிய ரயில் பெட்டிகளில் வசிக்கும் இவர்கள், தவிர சற்று தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். டொவினோ இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்த ரசாயன தொழிற்சாலை காவலர்களின் இச்சையைத் தீர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழும் பாலியல் தொழிலாளியான நிமிஷா சஜயன், ஆரம்பத்தில் டொவினோவை சந்தேகப்படுகிறார்.

பின்னர் படிப்படியாக அவனுடன் பழகி நட்பை உருவாக்குகிறாள். டொவினொ மூலம் அந்த முதியவர் மற்றும் பேரக்குழந்தைகளின் அன்பை பெறுகிறார். ஒருவழியாக எல்லாம் சரியாக செல்ல துவங்கும்போது, தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் வசிப்பதாகக் கூறி, அதிகாரிகளால் தங்களது வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். இந்த அச்சுறுதலை அவர்கள் எவ்வாறு கையாண்டனர்? அங்கிருந்து வெளியேறினார்களா? இல்லையா? – இதுதான் படத்தின் திரைக்கதை.

இந்த கதைக்களத்தை கருவாக வைத்துக்கொண்டு, இடம்பெயர்தல், போர்க் குற்றங்களின் பயங்கரம், மனித உயிரிழப்புகள், சமூக அக்கறையின்மை மற்றும் பாசிசம் ஆகியவற்றை மிக யதார்த்தமான முறையில் படம் பேசுகிறது. படத்தில் வரும் பெரும்பாலான உரையாடல்கள் போர் குறித்தவையாக இருந்தாலும், அது எங்கு நடக்கும் போர், யாருக்கு இடையிலான போர் என்பது உள்ளிட்ட விவரங்களும், காட்சிகளும் படத்தில் இடம்பெறவில்லை. படத்தில் காவல் துறை, துப்பாக்கிகள், ரசாயன தொழிற்சாலை, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை போருக்கு எதிரான சித்தரிப்புகளாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் மையப் பாத்திரங்களில் வரும் டொவினோ தாமஸ், நிமிஷா சஜயன் நேர்த்தியாக தங்களது பங்களிப்பை செய்துள்ளனர். குறிப்பாக, சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வலிமையற்ற மனிதர்களின் வெளிப்பாடுகளின் மூலம் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல் இருட்டைக் கொஞ்சோண்டு வெளிச்சமாக்கும் மஞ்சள் விளக்கொளியின் சூட்டை நிமிஷா சஜயனின் அழகும், நடிப்பும் இன்னும் பிரகாசமாக்குகிறது. இப்படத்தில் லட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரங்களும் சில வருகின்றன. அதில், பேராசிரியாக வரும் இந்திரன்ஸ் கதாப்பாத்திரம் குறிப்பிடத்தகுந்தது. பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவரான அவர் தனது சித்தாந்தத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப்படுகிறார். வன்முறையை கைவிட்டு மக்கள் வாசிப்புக்கு முன்னுரிமை கொடுத்தால் சிறந்த உலகத்தை படைக்கலாம் என்ற கருத்தை அவரது பாத்திரப் படைப்பு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

சிறந்த கலைப் படைப்பாக வந்துள்ள இப்படத்துக்கு வலுசேர்த்திருப்பது தொழில்நுட்பக் குழு. அவர்களது உழைப்பால், அயற்சியை ஏற்படுத்தும் தருணங்களில்கூட பார்வையாளர்களின் கண்கள் திரையைவிட்டு அகல மறுக்கிறது. அதிலும் ஒளிப்பதிவாளர் யேது ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு கண்களை களவாடிக் கொள்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஸ்கிரீன்ஷாட் போல் பளிச்சிடுகிறது. மலை கிராமம், பச்சை சூழ்ந்த மலை முகடுகள், துருவேறிய ரயில் பெட்டி, அரிக்கன் விளக்கு, சீரியல் பல்புகள், மஞ்சள் நிற குண்டு பல்பு, பைனாகுலர் வியூ என படத்தில் வரும் சின்னஞ்சிறிய பொருட்களென நல்ல ஒரு விஷுவல் ட்ரீட். அதேபோல், ரிக்கி கெஜ்ஜின் இசையமைப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியில் வரும் அந்தப் பாடல் படத்தில் ஒட்டவில்லை. படத்தின் பின்னணி இசைக்கு சவுண்ட் எஃபெக்ட்ஸ் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.

கொஞ்ச நாளைக்கு முன்பு உக்ரைன் – ரஷ்யா, இப்போது இஸ்ரேல் – ஹமாஸ் என போர்கள் நீளும் சூழலில், இந்தப் படம் அவசியமானது. உலக அரசியல் துவங்கி உள்ளூர் போலீஸ் வரை பல நிகழ்கால சம்பவங்களை உள்ளடக்கிய இந்த மாய யதார்த்த கலை படைப்பு அனைவரையும் ஈர்த்ததா என்பது கேள்விக்குறியே. படத்தில் பேசப்படும் பல்வேறு பிரச்சினைகளின் கலவை சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது. அதேபோல், போருக்கு எதிரான குரல், மிகவும் அவசியமானதாக இருந்தாலும், அவை பிரச்சார நெடிபோல மாறி, பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது. இப்படியான பல குறைகள் தென்பட்டாலும் தொழில்நுட்ப பணிகளும், படத்தில் நடித்துள்ள நடிகர்களின் இலகுவான நடிப்பும் கதை ஓட்டத்தை சீராக்கியிருக்கிறது. கொஞ்சம் பொறுமையிருந்தால் நிச்சயம் திரையில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்தான் இந்த “அத்ரிஷிய ஜலகங்கள்”. கடந்த நவம்பர் 24-ம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Related posts