அரச நிறுவனங்களில் ஊழல்கள், முறைகேடுகள்

சில அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு செயற்படவேண்டிய முறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் 2023.11.17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைய, பிரதேச செயலக மட்டத்தில் நேர்மையான அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

இதன்போது குழு முன்னிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு திறமையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முடியாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அந்தந்தப் பதவிகளுக்கு போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் திறமையான அதிகாரிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்பளத்துடன் ஒப்பிட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் கேட்டுக்கொண்டனர்.

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சேவைகளை வினைத்திறனுடன் பெற்றுக் கொள்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு சரியான சம்பள அளவை அமைத்து சம்பளம் வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைகளை உரிய பிரிவுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் முன்பை விட பல துறைகளில் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அத்துடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிக்கைகளை வழங்கும் அனைத்து நபர்களிடமிருந்தும் அந்த அறிக்கைகளைப் பெறுவதற்கு தமக்கு உரிமை உண்டு என்றும், அது இலத்திரனியல் முறையில் (electronic system) மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், அதற்குத் தேவையான இலத்திரனியல் கட்டமைப்பு, தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமை காரணமாக அந்தச் செயன்முறையை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளைக் குறைப்பதற்கு அந்த ஆணைக்குழுவினால் சமூகத்தில் மேற்கொள்ளும் விழிப்புணர்வைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கும், அந்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜே.சி. அலவதுவல, சமிந்த விஜேசிறி, (சட்டத்தரணி) உதயன கிரிந்திகொட, (ஜனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க ஆகியோரும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய, (சட்டத்தரணி) மதுர விதானகே, இசுறு தொடங்கொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts